திருச்சி திருவெறும்பூர் அருகே ‘பைக்’ திருடனை போலீசார் கைது செய்தபோது அதற்கு எதிர்ப்பு தெரிவித்து உறவினர்கள் சாலை மறியல் செய்தனர். தற்கொலை செய்து கொள்வோம் என்றும் மிரட்டினர். இது தொடர்பாக 5 பேர் கைது செய்யப்பட்டனர். திருவெறும்பூர் அருகே உள்ள அரியமங்கலம் அம்மாக்குளம் கலைவாணர் தெருவை சேர்ந்தவர் பிச்சைமுத்து. இவரது மனைவி விசாலாட்சி. இவர்களது மகன் பரத் குமார் ( வயது 20). இவருக்கு கடந்த 1-ம் தேதி, ரூ 2 லட்சத்து 17 ஆயிரம் மதிப்புடைய மோட்டார் சைக்கிளை வாங்கி கொடுத்தனர். பைக்கில் கோவிலுக்கு சென்ற பரத்குமார், அன்று இரவு வீட்டு வாசலில் நிறுத்தி இருந்தார். மறுநாள் காலை பார்த்தபோது பைக்கை காணவில்லை. பல்வேறு இடங்களில் தேடியும் கிடைக்காததால் அரியமங்கலம் போலீஸ் நிலையத்தில் புகார் செய்தார்.
அதன்பேரில், போலீசார் வழக்கு பதிவு செய்து அந்த பகுதியில் உள்ள கண்காணிப்பு கேமராவை பார்வையிட்டனர். இந்த வழக்கு தொடர்பாக அரியமங்கலம் அம்மா குளம் பகுதியை சேர்ந்த ரியாஸ் ராஜ்(22) என்பவரை பிடித்து போலீசார் விசாரித்தபோது, திருச்சி பாலக்கரை கூனிபஜாரை சேர்ந்த மேகராஜ் (31), அரியமங்கலம் நேருஜி நகரை சேர்ந்த ஹரிபிரசாத் ஆகியோர் லாக்கை உடைத்து பைக்கை திருடி சென்றதாக தெரிவித்தார். அதன் அடிப்படையில் போலீசார் பைக்கை மீட்டனர். மேலும், பைக்கை திருடியதாக 3 பேரையும் கைது செய்தனர்.

இந்தநிலையில் மேகராஜ் மனைவி எலிசபெத் (28) என்பவர் தனது கணவர் மீது அரியமங்கலம் போலீசார் பொய் குற்றம் சுமத்துவதாக கூறி அவரது உறவினரான அந்தோணி மகன் லாரன்ஸ் (19), திருச்சி பெரிய மிளகு பாறையை சேர்ந்த சின்னபதாஸ், காமராஜ் மகன் மைக்கேல் ( 23 ), பெரிய மிளகுபாறை அந்தோணி மகன் ஆதாம் (23), திருச்சி பாலக்கரை கூனி பஜாரை சேர்ந்த ஏகாம்பரம் மகன் அறிவழகன் (24) ஆகிய 5 பேரும் போலீசாருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டதோடு திருச்சி- தஞ்சை தேசிய நெடுஞ்சாலையில் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டதோடு தற்கொலை செய்து கொள்ளப் போவதாக செல்போன் டெம்பர் கிளாசால் கைகளில் கிழித்துக் கொண்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
அவர்கள் 5 பேரையும் அரியமங்கலம் போலீசார் கைது செய்ததோடு அவர்கள் மீது வழக்கு பதிவு செய்துதிருச்சி 6-வது குற்றவியல் நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தி திருச்சி மத்திய சிறையில் அடைத்தனர். இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது

Comments are closed, but trackbacks and pingbacks are open.