திருச்சி ஸ்ரீரங்கம் அம்மா மண்டபம் படித்துறையில் ஆடிப்பெருக்கு விமரிசையாக நடைபெற்று வருகிறது. ஸ்ரீரங்கம் அம்மா மண்டபம் படித்துறைக்கு இன்று அதிகாலை முதலே புதுமண தம்பதிகள், அவர்களது பெற்றோர்கள், உறவினர்கள் மற்றும் பொதுமக்கள் வர தொடங்கினர். ஆடிப்பெருக்கு விழாவை கொண்டாட திருச்சி மட்டுமில்லாமல் அரியலூர், பெரம்பலூர் உள்பட வெளி மாவட்டங்களை சேர்ந்தவர்களும் ஏராளமானோர் வந்திருந்தனர். பெரும்பாலானோர் திருமணத்தன்று மணமக்கள் அணிந்த திருமண மாலைகளை காவிரி ஆற்றில் விட்டனர்.
அவர்கள் அம்மா மண்டபம், அய்யாளம்மன் படித்துறைகளில் குவிந்து வாழை இலையில் மஞ்சள் பிள்ளையார், தேங்காய், பழம், வெல்லம், ஏலக்காய் கலந்த அரிசி, கரும்பு துண்டு, கொய்யா, திராட்சை, ஆப்பிள், ஆரஞ்சு, சாத்துக்குடி மாதுளம் பழம் வைத்தும், மஞ்சள், குங்குமம், கருகமணி உள்பட மங்கல பொருட்களை வைத்தும், மஞ்சள் கயிறுகளையும் வைத்து காவிரி அன்னையை கும்பிட்டனா். அதன் பிறகு பூஜையில் வைக்கப்பட்ட மஞ்சள் கயிற்றை சுமங்கலி பெண்கள் மற்ற சுமங்கலி பெண்களின் கழுத்தில் கட்டி விட்டனர். குடும்பத்தில் உள்ள ஆண்கள் கையில் மஞ்சள் கயிறு கட்டிக் கொண்டனர்.

இளம் பெண்களும் தங்களுக்கு நல்ல வரன் அமைய வேண்டி மஞ்சள் நூலை அணிந்து கொண்டனர். அம்மாமண்டபம் படித்துறைக்கு மக்கள் கூட்டம், கூட்டமாக வருவதால் குற்றச்சம்பவங்கள் நடைபெறாமல் தடுக்க ஏராளமான போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். தீயணைப்பு வீரர்களும் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளனர். இதேபோல் கருடமண்டபம் படித்துறை, அய்யாளம்மன் படித்துறை, ஓடத்துறை படித்துறை, தில்லைநாயகம் படித்துறை, கீதாபுரம் படித்துறை உள்ளிட்ட படித்துறைகளில் பொதுமக்கள் கூடி காவிரி அன்னைக்கு படையல் இட்டு வணங்கினர். ஆடிப்பெருக்கு விழாவை திருச்சியில் பொதுமக்கள் உற்சாகமாக கொண்டாடினர். கோவில்களுக்கு சென்றும் சாமி தரிசனம் செய்தனர்.


Comments are closed, but trackbacks and pingbacks are open.