உலகம் முழுவதும் 120-க்கும் மேற்பட்ட நாடுகளில் ஆகஸ்ட்- 1 முதல் 7-ந் தேதி வரை “உலக தாய்ப்பால் வாரம்” கொண்டாடப்படுகிறது. இவ்வாரத்தை உலக சுகாதார நிறுவனம் மற்றும் ஐக்கிய நாடுகள் குழந்தை நல நிறுவனம் இணைந்து தாய்ப்பாலூட்டும் நடவடிக்கைக்கான உலக கூட்டணியால் 1992-ம் ஆண்டு தொடங்கப்பட்டது. தாய்ப்பாலின் முக்கியத்துவத்தை எடுத்துரைப்பது, தாய்ப்பால் கொடுப்பதை ஊக்குவிப்பது மற்றும் உலகம் முழுவதும் உள்ள குழந்தைகள் மற்றும் தாய்மார்களின் ஆரோக்கியத்தை மேம்படுத்துவது குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்துவதே இதன் குறிக்கோளாகும். தமிழக முதலமைச்சராக ஜெயலலிதா இருந்த காலகட்டத்தில், குழந்தை பெற்ற தாய்மார்களின் நலன் கருதி பஸ் நிலையங்கள் உள்ளிட்ட முக்கிய இடங்களில் குழந்தைகளுக்கு பாலூட்ட தனி அறையை ஏற்படுத்தி கொடுத்தார். இது, பெண்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது.
ஆனால், தமிழகம் முழுவதும் பொதுமக்கள் குறைதீர்க்கும் முகாம்கள் நடக்கும் மாவட்ட ஆட்சியர் அலுவலகங்கள், வட்டாட்சியர் அலுவலகங்கள் என எண்ணற்ற அரசு அலுவலகங்களில் “தாய்மார்கள் பாலூட்டும் அறை” இல்லாததால் அங்கு வரும் தாய்மார்கள் பெரும் சிரமத்திற்கு உள்ளாகின்றனர். குழந்தை அழுதாலும் பொதுமக்கள் சூழ்ந்து நிற்பதால் குழந்தைக்கு பால் ஊட்ட முடியாமல் தவிக்கும் நிலை ஏற்படுகிறது. ஆகவே, பொதுமக்கள் குறைதீர்க்கும் முகாம் மற்றும் பிற முகாம்கள் நடக்கும் அரசு அலுவலகங்களில் “தாய்மார்கள் பாலூட்டும் அறை” அமைக்க வேண்டும் என்பதே தாய்மார்களின் கோரிக்கையாக உள்ளது.
இதுகுறித்து திருச்சி மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் மனு எழுதி கொடுக்கும் பணியில் ஈடுபட்டு வரும் சாந்தி கூறுகையில், தமிழகம் முழுவதும் திங்கட்கிழமை தோறும் கலெக்டர் அலுவலகங்களில் பொதுமக்கள் குறை தீர்க்கும் நாள் கூட்டம் நடைபெறுகிறது. இதில் பெண்களே அதிக அளவில் வந்து கோரிக்கை மனுக்களை கொடுக்கின்றனர். அவர்களில் கைக்குழந்தையுடன் வரும் பெண்களும் அதிகம். அவர்களுக்கு பாலூட்டும் அறை தனியாக இல்லாததால் சிரமப்படுகின்றனர். ஆகவே, அனைத்து கலெக்டர் அலுவலகங்களில் “தாய்மார்கள் பாலூட்டும் அறை” அமைத்து கொடுக்க தமிழக அரசு முன்வர வேண்டும். இதே போன்று மக்கள் கூடும் அனைத்து இடங்களிலும் அமைக்கப்பட வேண்டும் என்றார்.
திருச்சி மாவட்ட கலெக்டர் அலுவலகத்திற்கு வந்த பெண் ஒருவர் கூறுகையில், ” இதுபோன்ற இடங்களில் குழந்தைக்கு பால் கொடுக்க தாய்மார்கள் கூச்சப்படுவார்கள். அவர்களுக்கென்று தனியாக அறை ஏற்படுத்தித் தர வேண்டும். அதே போல, மக்கள் அதிகம் வந்து போகும் இடங்களான கலெக்டர் அலுவலகம், தாலுகா அலுவலகம், அரசு மருத்துவமனை போன்ற இடங்களில் பிரத்யேகமாக பால் ஊட்டும் அறை அமைத்தால் மிகவும் பயனுள்ளதாக இருக்கும்” என்றார்.
தாய்ப்பால் குழந்தைகளுக்கு ஆரோக்கியமானது. தாய்ப்பால் கொடுப்பதால் தாய்மார்களுக்கு மார்பக புற்றுநோய், கருப்பை புற்றுநோய், நீரிழிவு நோய் மற்றும் இதய நோய் ஏற்படும் அபாயம் குறைகிறது. தாய்ப்பால் கொடுப்பதன் மூலம் மார்பக புற்றுநோயால் ஒவ்வொரு ஆண்டும் 20,000 மகப்பேறு இறப்புகளைத் தவிர்க்கலாம் என்று மதிப்பிடப்பட்டுள்ளது. இத்தகைய பலன்களை அளிக்கும் இச்செயல்பாட்டிற்கு அரசு உதவ வேண்டும் என்பதே தாய்மார்களின் எதிர்பார்ப்பாக உள்ளது.

Comments are closed, but trackbacks and pingbacks are open.