திருச்சி மாவட்டம் புங்கனூர் கொத்தனார் தெருவை சேர்ந்தவர் கார்த்திக் (வயது 38) . இவர் தீபாவளி அன்று தனது நண்பர்களுடன் இரு சக்கர வாகனத்தில் சென்ற போது ராம்ஜிநகரை சேர்ந்த வாலிபருடன் தகராறு ஏற்பட்டது. அப்போது இரு தரப்பினரும் ஒருவரை ஒருவர் தாக்கிக் கொண்டனர். இந்த சம்பவத்தில் கார்த்திக்கு ஆதரவாக செயல்பட்ட அவரது நண்பர் கொத்தனார் உதயகுமார் ( 31) உள்பட 4 பேரை எதிர்கோஷ்டியினர் செங்கல் மற்றும் உருட்டுக்கட்டையால் தாக்கி உள்ளனர். இதில், படுகாயம் அடைந்த உதயகுமார் உள்பட 4 பேரும் திருச்சி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டனர். அவர்களில் உதயகுமார் சிகிச்சை பலனின்றி இறந்தார். இந்த கொலை சம்பவத்தில் ஈடுபட்டவர்களை கைது செய்யக்கோரி உதயகுமாரின் உறவினர்கள் திருச்சி அரசு மருத்துவமனை வளாகத்தில் அமர்ந்து மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். அவர்களிடம் சோமரசம்பேட்டை போலீசார் பேச்சுவார்த்தை நடத்தி இதுகுறித்து நடவடிக்கை எடுக்கப்படும் என்று கூறியதன்பேரில் மறியல் போராட்டத்தை கைவிட்டனர். இந்நிலையில் இந்த கொலை வழக்கு தொடர்பாக சோமரசம்பேட்டை போலீசார் வழக்கு பதிவு செய்து தாக்குதலில் ஈடுபட்ட முருகானந்தம்(23), தீனதயாளன் ( 25), ஹாரிஸ் ( 24), லோகேஸ்வரன் (23) மற்றும் 17 வயது சிறுவர்கள் 4 பேர் என மொத்தம் 8 பேரை கைது செய்தனர். அதில் சிறுவர்கள் 4 பேரையும் கீழரண் சாலையில் உள்ள சிறுவர் சீர்திருத்த பள்ளியில் சேர்த்தனர். மற்ற 4 பேரையும் திருச்சி நீதிமன்றத்தில் ஆஜர்ப்படுத்தி திருச்சி மத்திய சிறையில் அடைத்தனர்.
Comments are closed, but trackbacks and pingbacks are open.