மறுசீரமைப்பு என்கிற பெயரில் தமிழகத்தில் 8 நாடாளுமன்ற தொகுதிகள் குறைய வாய்ப்பு- முதல்வர் மு.க.ஸ்டாலின்…!
சென்னை தலைமைச் செயலகத்தில் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் இன்று(25-02-2025) அமைச்சரவை கூட்டம் நடைபெற்றது. அமைச்சரவை கூட்டத்திற்கு பிறகு, செய்தியாளர்களை சந்தித்த முதல்வர் மு.க.ஸ்டாலின், “தமிழ்நாடு இன்று மிகப்பெரிய உரிமைப் போராட்டத்தை நடத்த வேண்டிய சூழ்நிலைக்கு தள்ளப்பட்டுள்ளது. எனவே, மார்ச் 5-ம் தேதி தேர்தல் ஆணையத்தில் பதிவு செய்யப்பட்ட 40 கட்சிகளை அழைத்து அனைத்து கட்சி கூட்டம் நடைபெற உள்ளது. தொகுதி மறுசீரமைப்பின் பேரில் தென்னிந்தியாவின் தலை மேல் கத்தி தொங்கிக்கொண்டிருக்கிறது. அனைத்து வளர்ச்சி குறியீடுகளிலும் முதன்மை மாநிலமாக இருக்கக்கூடிய தமிழ்நாடு கடுமையாக பாதிக்கப்படவிருக்கிறது. தமிழ்நாட்டில் தற்போது 39 மக்களவை தொகுதிகள் உள்ளது. இதை குறைக்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது. மத்திய அரசு 2026ம் ஆண்டு மக்களவை தொகுதிகளை மறுசீரமைப்பு செய்யப்பட உள்ளது. மக்கள் தொகை அடிப்படையில் தான் இந்த சீரமைப்பு நடைபெற உள்ளது. மக்கள் தொகையை கட்டுப்படுத்துவது இந்தியாவின் முக்கிய இலக்கு. அதில் தமிழகம் வெற்றி பெற்றுள்ளது. பத்தாண்டுகளாக குடும்பக் கட்டுப்பாடு மற்றும் பெண்கள் கல்வி, சுகாதாரம் மூலம் நாம் இதை சாதித்துள்ளோம். மக்கள் தொகை குறைவாக இருக்கும் காரணத்திலேயே நாடாளுமன்ற தொகுதிகளின் எண்ணிக்கையை குறைக்கும் சூழல் ஏற்பட்டுள்ளது. தற்போதைய மக்கள் தொகை அடிப்படையில் கணக்கிட்டால், தமிழ்நாடு 8 தொகுதிகளை இழக்கக்கூடும். அதன்படி தமிழகத்திற்கு 31 எம்.பிக்கள் தான் இருப்பார்கள்.
மேலும் நாடு முழுவதும் ஒட்டுமொத்த எம்.பி.க்களின் எண்ணிக்கையை உயர்த்தி, அதன் அடிப்படையில் தொகுதிகள் பிரிக்கப்பட்டாலும், அதுவும் தமிழகத்திற்கு இழப்பு தான். நம்முடைய பிரதிநிதித்துவம் குறையும். இதனால் தமிழகத்தின் குரல் நசுக்கப்படும். இது உறுப்பினர்களின் எண்ணிக்கை சார்ந்தது மட்டுமல்ல. நம் மாநிலத்தின் உரிமை சார்ந்தது. தமிழ்நாடு எதிர்கொள்ளும் இந்த முக்கிய பிரச்சனையில், அனைத்து அரசியல் கட்சிகள் மற்றும் தலைவர்கள் ஒன்றிணைந்து, இந்த கூட்டத்தை ஏற்பாடு செய்திருக்கிறோம். எனவே அனைத்து அரசியல் கட்சிகளும் அரசியலை கடந்து இந்த விவகாரத்தில் ஒன்றிணைந்து குரல் கொடுக்க வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறோம்” என்று அவர் கூறினார். இந்நிலையில், மும்மொழி கொள்கை போன்ற விவகாரங்கள் மொழிப்போருக்கு வித்திடுகிறதா என்ற செய்தியாளரின் கேள்விக்கு பதிலளித்த முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின், “நிச்சயம் வித்திடுகிறது. அதற்கு நாங்கள் தயாராக இருக்கிறோம்” என்று பதிலளித்தார்.
Comments are closed.