8 லட்சம் மாணவ- மாணவிகள் எழுதும் பிளஸ்-2 பொதுத்தேர்வு நாளை மார்ச்-3 தொடங்குகிறது- செல்போன் கொண்டு செல்ல தடை…!
தமிழக பள்ளிக்கல்வி பாடத்திட்டத்தில் 10-ம் வகுப்பு, பிளஸ்-1, பிளஸ்-2 ஆகிய வகுப்புகளுக்கு பொதுத்தேர்வு நடத்தப்பட்டு வருகிறது. அந்தவகையில் 2024-25 -ம் கல்வி ஆண்டுக்கான பிளஸ்-2 பொதுத் தேர்வு நாளை (மார்ச் 3) தொடங்கி 25-ம் தேதி வரை நடைபெற உள்ளது. இந்த தேர்வை 3 லட்சத்து 78 ஆயிரத்து 545 மாணவர்கள், 4 லட்சத்து 24 ஆயிரத்து 23 பள்ளி மாணவிகள், 18 ஆயிரத்து 344 தனித்தேர்வர்கள், 145 சிறைவாசிகள் என மொத்தம் 8 லட்சத்து 21 ஆயிரத்து 57 பேர் எழுத இருக்கின்றனர். இந்த தேர்வை மாணவ- மாணவிகள் எழுதுவதற்கு ஏதுவாக 3 ஆயிரத்து 316 தேர்வு மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன. தேர்வை கண்காணிக்க 45 ஆயிரத்துக்கும் மேற்பட்ட ஆசிரியர்கள், தேர்வு முறைகேடுகளை தடுக்க 4 ஆயிரத்து 800-க்கும் மேற்பட்ட பறக்கும் படைகள் ஈடுபட உள்ளனர். பொதுத்தேர்வு நடைபெறும் நாட்களில் தடையின்றி மின்சாரம் வழங்கிட மின்சாரத்துறைக்கும், தேர்வு பணிகளுக்கு பாதுகாப்பு வழங்கிட காவல் துறைக்கும், தேர்வு மையங்களில் போதுமான அடிப்படை வசதிகளை செய்துதர உள்ளாட்சி அமைப்புகளுக்கும் தகுந்த அறிவுரை வழங்கப்பட்டு இருக்கின்றன. மாணவர்கள், பெற்றோர்கள் தங்கள் புகார்கள், கருத்துகள், சந்தேகங்களை முழு நேர தேர்வு கட்டுப்பாட்டு அறை 94983 83075, 94983 83076 ஆகிய செல்போன் எண்களை காலை 8 மணி முதல் இரவு 8 மணி வரை தொடர்பு கொண்டு தெரிந்து கொள்ளலாம் என்று பள்ளிக்கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி தெரிவித்துள்ளார். மேலும் தேர்வு மைய வளாகத்துக்குள் செல்போன் எடுத்து வருவதற்கு முற்றிலும் தடை விதிக்கப்பட்டு இருக்கிறது. ஆசிரியர்களுக்கும் தேர்வறையில் செல்போன் பயன்படுத்த அனுமதி மறுக்கப்பட்டுள்ளது.
இதனை மீறும் தேர்வர்கள், ஆசிரியர்கள் மீது கடுமையான நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என எச்சரிக்கை விடுக்கப்பட்டு இருக்கிறது. விடைத்தாள்களில் தேர்வு எண், பெயர், சிறப்பு குறியீடுகள் ஆகியவற்றை குறிப்பிடக்கூடாது. மாணவரின் புகைப்படம், பதிவெண், பாடம் உள்ளிட்ட விவரங்கள் கொண்ட முகப்புத்தாள், முதன்மை விடைத்தாளுடன் இணைத்து வழங்கப்படும். அதை சரிபார்த்து மாணவர்கள் கையொப்பமிட்டால் போதும். அறை கண்காணிப்பாளரே விடைத்தாள்களை பிரித்து வைக்க வேண்டும்.தேர்வு நேரங்களில் தேர்வர்கள் ஒழுங்கீன செயல்களில் ஈடுபட்டால் குற்றங்களுக்கு தக்கவாறு தண்டனைகள் வழங்கப்படும். ஒழுங்கீன செயல்களுக்கு உடந்தையாகவோ, ஊக்கப்படுத்தவோ பள்ளி நிர்வாகம் முயன்றால் பள்ளி அங்கீகாரத்தினை ரத்து செய்து கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் எச்சரிக்கப்பட்டுள்ளது. பொதுத்தேர்வு குறித்த சந்தேகங்கள், புகார்களை தெரிவிக்க, பள்ளிக்கல்வி துறையின் ‘14417’ என்ற இலவச உதவி மையத்தை தொடர்பு கொள்ளலாம் என்றும் தேர்வு துறை தெரிவித்துள்ளது.
Comments are closed.