Rock Fort Times
Online News

7500 பள்ளி குழந்தைகளுக்கு செல்வமகள் சேமிப்புத் திட்டம் – அமைச்சா் அன்பில் மகேஷ் பொய்யாமொழி.

தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலின் 70 வது பிறந்த நாளை முன்னிட்டு அன்பில் அறக்கட்டளை சார்பில் திருச்சி அரியமங்கலம் எஸ்.ஐ.டி கல்லூரி வளாகத்தில், திருவெறும்பூர் தொகுதியைச் சேர்ந்த பிறந்த குழந்தை முதல் 10 வயது வரை உள்ள 7500 பெண் குழந்தைகளுக்கு செல்வமகள் சேமிப்பு திட்டத்திற்கான கணக்கை துவக்கி வைத்து பத்திரம் மற்றும் கணக்கு புத்தகத்தை தமிழ்நாடு பள்ளி கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி இன்று வழங்கினார். நிகழ்ச்சியில் பேசிய அமைச்சா் அன்பில் மகேஷ் பொய்யாமொழி, அனைவருக்கும் முதலில் மகளிர் தின வாழ்த்துகள், திருச்சி எனது சொந்த மாவட்டம். திருவெறும்பூர் எனது சொந்த தொகுதி. இந்த தொகுதியில் 7500 குழந்தைகளுக்கு இன்று செல்வமகள் திட்டம் துவங்கியது எனக்கு மிகவும் மகிழ்ச்சி. பெற்றோர்கள் தங்களது குழந்தைகள் பெயரில் இந்த கணக்கில் சேமிக்க வேண்டும். இந்த சேமிப்பு தொகையை தங்களது குழந்தை பதினோராம் வகுப்பு சேரும் பொழுது அல்லது திருமணத்தின் பொழுது எடுக்கலாம். பெண்கள் பொருளாதாரத்தில் முன்னேர சேமிப்பு அவசியம். ஆண்கள் சம்பாதித்து செலவு செய்வார்கள், பெண்கள் சேமித்து செலவு செய்வார்கள் அதை ஊக்குவிக்க வேண்டும். பெற்றோர்கள் மற்றும் ஆசிரியர்கள் மாணவிகளுக்கு சேமிப்பு பழக்கத்தை கற்றுக் கொடுக்க வேண்டும். இது ஒவ்வொருவரின் பொறுப்பு ஆகும். தமிழ்நாடு முதலமைச்சா், பெண்கள் சார்ந்த திட்டங்களையே செயல்படுத்துகிறார், ஆட்சிப் பொறுப்பேற்ற பின் முதல் கையெழுத்து, பெண்கள் பேருந்தில் இலவச பயணம் செய்யும் கோப்பில் தான் முதல் கையெழுத்து போட்டார். 12ஆம் வகுப்பிலிருந்து கல்லூரி செல்லும் பெண்களுக்கு மாதம் ஆயிரம் ரூபாய் திட்டத்தையும் கொண்டு வந்துள்ளார். மாணவிகளாகிய நீங்கள் விரும்பிய பதவியை அடைந்து இந்தியாவை முன்னேற்ற பாதைக்கு அழைத்துச் செல்ல வேண்டும் என்றார். இந்நிகழ்வில் தமிழ்நாடு அரசு கொறடா கோ.வி.செழியன், மாவட்ட ஆட்சித் தலைவர் பிரதீப்குமார், டி.ஆர்.ஓ அபிராமி, திருச்சி கோட்ட முதுநிலை அஞ்சலக கண்காணிப்பாளர் சுவாதிமதுர்மா, திருச்சி மாநகர திமுக செயலாளரும் திருச்சி மாநகராட்சி மண்டலம் மூன்றின் தலைவருமான மதிவாணன், பகுதி செயலாளர் நீலமேகம், மாமன்ற உறுப்பினர்கள் ரமேஷ், கார்த்தி உட்பட கட்சி நிர்வாகிகள் பலரும் கலந்து கொண்டனர். இந்நிகழ்ச்சியில் முன்னதாக திருச்சி மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் பாலமுரளி, வரவேற்றார். மாநகராட்சி துணை மேயர் திவ்யா  நன்றி கூறினார்.

Leave A Reply

Your email address will not be published.

Rockfort Times செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள வேண்டுமா? இல்லை ஆம்