தமிழகம் முழுவதும் போலி டாக்டர்கள் 72 பேர் கைது செய்யப்பட்டுள்ளனா் . இதுகுறித்து டி.ஜி.பி., அலுவலகம் நேற்று வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் …
இந்திய மருத்துவ கவுன்சிலில் டாக்டர்களாக பதிவு செய்யாமல், மருத்துவ படிப்பு தகுதி இல்லாமல், அரசால் அங்கீகரிக்கப்படாத மாற்று மருத்துவ முறையில் டாக்டர்களாக தொழில் செய்து வருவோர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இதையடுத்து நீதிமன்றம் சுட்டிக் காட்டியுள்ள டாக்டர்கள் மீது சுகாதாரத் துறை இணை இயக்குனர்களுடன் சேர்ந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என கமிஷனர்கள் மற்றும் மாவட்ட எஸ்.பி.,க்களுக்கு டி.ஜி.பி., சைலேந்திரபாபு உத்தரவிட்டார். அதன்படி, 10 நாட்களில், மாநிலம் முழுதும் 72 போலி டாக்டர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். திருவாரூர் 12, தஞ்சாவூர் 10, திருவள்ளூர் 8, சேலம் 6, புதுக்கோட்டை 5, தேனி 5, கடலுார் 4, அரியலுார் 4, திருவண்ணாமலை 4, பெரம்பலுார் 3, நாகப்பட்டினம் 3, விழுப்புரம் 3, தர்மபுரி 2, மதுரை, சிவகங்கை, கரூர் தலா 1 என, போலி டாக்டர்கள் பிடிபட்டுள்ளனர். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
