மேல் முறையீடு செய்தவா்களில் 7 லட்சத்து 35 ஆயிரம் மகளிருக்கு ரூ.1000 உரிமை தொகை….
முதல்வர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார்..
தமிழ்நாட்டில் 1.06 கோடி மகளிருக்கு மாதந்தோறும் ரூ.1,000 உரிமைத் தொகை வழங்கும் திட்டத்தை தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கடந்த செப்டம்பர் மாதம் 15-ம் தேதி தொடங்கி வைத்தார். அவர்களுக்கு 2 மாதங்கள் உரிமைத்தொகை வழங்கிய நிலையில் கணக்கில் வரவு வைக்கப்பட்ட நிலையில், 3-வது மாதமாக நவம்பர் மாதமும் வழங்கப்படவுள்ளது. தீபாவளி பண்டிகை காரணமாக, இந்த மாதம் உரிமைத் தொகை முன்கூட்டியே வழங்கப்பட்டு வருகிறது. இந்நிலையில், மகளிர் உரிமைத் தொகை நிராகரிக்கப்பட்டவா்களில் சுமார் 11 லட்சம் பேர் மேல்முறையீடு செய்திருந்தனர். அவர்களில் 7 லட்சத்து 35 ஆயிரம் பேர் தகுதியானவர்களாகக் கண்டறியப்பட்டுள்ளனர். அவர்களுக்கு இம்மாதம் முதல் மகளிர் உரிமைத் தொகை அளிக்கப்படவுள்ளது. இதன்மூலம் மகளிர் உரிமைத் தொகை பெறுவோர் எண்ணிக்கை 1,13,84,300-ஆக உயர்ந்துள்ளது. வைரஸ் காய்ச்சல் காரணமாக, கடந்த 5 நாள்களுக்கும் மேலாக ஓய்வெடுத்து வந்த முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், இன்று முதல் அலுவலகத்துக்கு வந்து தனது பணிகளைத் தொடங்கினார். அதன்படி, மகளிர் உரிமைத் தொகைத் திட்டத்தின் கீழ் 2-ம் கட்டமாக பயனாளிகள் சிலருக்கு உரிமைத் தொகையை வழங்கினார். இதற்கான நிகழ்ச்சி சென்னை கலைவாணர் அரங்கத்தில் நடைபெற்றது. விழாவில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கலந்துகொண்டு சில மகளிர்களுக்கு உரிமை தொகைக்கான பற்று அட்டைகளை வழங்கி சிறப்புரையாற்றினா். அப்போது அவா் பேசியதாவது :
கடந்த சில நாட்களாக காய்ச்சல், தொண்டை வலி காரணமாக வீட்டில் சில நாட்கள் ஓய்வெடுத்தேன். காய்ச்சல் சரியானாலும் தொண்டை வலி இன்னும் சரியாகவில்லை. தொண்டை வலியை விட தொண்டில் தொய்வு இருக்கக் கூடாது என்பதற்காகவே இந்த விழாவில் கலந்து கொண்டு உள்ளேன். முழு ஓய்வு எடுத்துக் கொள்ளுமாறு மருத்துவர்கள் அறிவுறுத்தினாலும் அதை பொருட்படுத்தாமல் இந்த விழாவில் கலந்து கொண்டு உள்ளேன். கலைஞர் மகளிர் உரிமைத்தொகை திட்டத்தில் பயனாளிகள் ஒருவரும் விடுபடக்கூடாது என்பதற்காக மீண்டும் விண்ணப்பித்தவர்களில் தகுதியான 7 லட்சத்து 35 ஆயிரம் பேருக்கு இன்றைய தினம் ரூ.1000 உதவித்தொகை வழங்கப்படுகிறது. இந்தத் தொகை நேற்றே அவா்களது வங்கிக் கணக்கில் வரவு வைக்கப்பட்டு விட்டது. இது உதவித்தொகை அல்ல. மகளிருக்கான உரிமை தொகை. இந்தத் திட்டம் நாட்டிற்கே முன் உதாரணமாக திகழ்கிறது. இந்தத் திட்டத்தில் சிறிதளவும் பிரச்சனை ஏற்படாத வகையில் திறம்பட செயல்பட்ட அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் மற்றும் அரசு அலுவலர்கள், உள்ளாட்சி அமைப்பு பிரதிநிதிகள் ஆகியோருக்கு என் மனமார்ந்த நன்றியினை தெரிவித்துக் கொள்கிறேன். பெண்களுக்கு சொத்துரிமை, கல்வி, வேலை வாய்ப்பு, உள்ளாட்சி அமைப்புகளில் இட ஒதுக்கீடு வழங்கியது திமுக அரசுதான். இவ்வாறு அவர் கூறினார். விழாவில் அமைச்சர்கள் உதயநிதி ஸ்டாலின், மா.சுப்பிரமணியன், சேகர்பாபு, தயாநிதி மாறன் எம்.பி , சென்னை மாநகராட்சி மேயா் பிாியா, அரசு தலைமை செயலாளா் சிவதாஸ் மீனா மற்றும் அரசு அதிகாரிகள், வங்கி அதிகாாிகள் கலந்து கொண்டனர். இதனைத் தொடர்ந்து அனைத்து மாவட்டங்களிலும் அமைச்சர்கள் தலைமையில் கலைஞர் மகளிர் உரிமைத் தொகை வழங்கும் விழா நடைபெற்றது.

Comments are closed, but trackbacks and pingbacks are open.