Rock Fort Times
Online News

குரூப்-4 தேர்வு திருச்சி மாவட்டத்தில் 65 ஆயிரம் பேர் எழுதினர்- 18,000 பேர் ஆப்சென்ட்…!

தமிழகம் முழுவதும் அரசுத் துறைகளில் காலியாக உள்ள, கிராம நிர்வாக அதிகாரி, வனக்காவலர், பில் கலெக்டர், ஆவின் ஆய்வக உதவியாளர், கூட்டுறவு சங்கங்களின் இளநிலை ஆய்வாளர் மற்றும் பல்வேறு துறைகளில் காலியாக உள்ள இளநிலை உதவியாளர், தட்டச்சர், சுருக்கெழுத்து தட்டச்சர், நேர்முக உதவியாளர் என மொத்தம், 6,344 பணியிடங்களுக்கான தேர்வு இன்று(09-06-2024) நடைபெற்றது.  தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் (டிஎன்பிஎஸ்சி) சார்பில் நடைபெறும் இந்த தேர்வினை எழுத தமிழகம் முழுவதும், 20 லட்சம் பேர் விண்ணப்பித்திருந்தனர்.  திருச்சி மாவட்டத்தை பொறுத்தவரை  85 ஆயிரத்து 747 பேர் விண்ணப்பித்திருந்தனர்.  தேர்வு நடப்பதற்கு ஒரு மணி நேரத்திற்கு முன்னதாக, தேர்வு மையத்திற்கு வந்துவிட வேண்டும் என்ற அறிவிப்பு காரணமாக, காலை 8 மணிக்கே தேர்வர்கள் மையங்களின் முன்பு குவிந்தனர்.  திருச்சியில் உள்ள அண்ணா பல்கலைக்கழக வளாகத்தில் மொத்தம், 1,200 பேர் தேர்வு எழுத அனுமதி அளிக்கப்பட்டு இருந்தது.  இதையடுத்து தேர்வர்கள் காலையிலே பெரும் திரளாக வளாக நுழைவாயிலில் கூடினர். வாயிற்கதவை திறந்தபோது, சினிமா  தியேட்டருக்குள் நுழைவது போல திபுதிபுவென உள்ளே நுழைந்தனர்.  அவர்கள் எங்கெங்கு தேர்வு எழுத செல்ல வேண்டும் என்று குறிப்பிடப்பட்டிருந்தன. காலை 9 மணிக்கு பிறகு வந்த தேர்வர்கள் யாரும் நுழைவாயிலில் அனுமதிக்கப்படவில்லை. நுழைவாயில் முன்பு நின்ற டீன் செந்தில்குமார் அவர்களை திரும்பச் செல்ல அறிவுறுத்தினார்.  இதனால், தஞ்சாவூர், புதுக்கோட்டை, திருச்சி மாவட்டத்தின் புறநகர் பகுதிகளில் இருந்து தேர்வெழுத வந்திருந்த, 20க்கும் மேற்பட்டோர் தேர்வு எழுத முடியாமல், ஏமாற்றத்துடன் திரும்பினர்.இதனால் அங்கு சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.  இந்நிலையில் குருப் 4 தேர்வு நடைபெறும் மையத்தில் திருச்சி மாவட்ட கலெக்டர்  பிரதீப்குமார் நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.  அப்பொழுது உதவி கலெக்டர் ( பயிற்சி)  அமித்குப்தா உடன் இருந்தார் .  திருச்சி மாவட்டத்தை பொருத்தவரை 301தேர்வு மையங்களில் 83 ஆயிரம் 465 பேர் தேர்வு எழுத ஹால் டிக்கெட் வழங்கப்பட்டு இருந்தது. ஆனால் இன்று 65 ஆயிரத்து 350 பேர் மட்டுமே தேர்வு எழுதினர்.18,115 பேர் தேர்வு எழுத வரவில்லை.  பார்வையற்ற மாற்றுத்திறனாளிகள் தேர்வு எழுத  மாற்று ஏற்பாடு செய்யப்பட்டு இருந்தது.

 

Comments are closed.

Rockfort Times செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள வேண்டுமா? இல்லை ஆம்