கேரளாவில் இருந்து தமிழ்நாட்டிற்கு கடத்தி வரப்பட்ட 6.140 கிலோ தங்கக் கட்டிகளை போலீசார் பறிமுதல் செய்தனர். கேரளாவில் இருந்து கோயம்புத்தூருக்கு தங்கம் கடத்தப்படுவதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அதன் அடிப்படையில் கே.ஜி.சாவடி காவல் ஆய்வாளர் சண்முகம் தலைமையில், உதவி ஆய்வாளர் திருமலைச்சாமி உள்ளிட்ட போலீசார் வாளையாறு எல்லையில் வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது கேரளா மாநிலம், பாலக்காட்டில் இருந்து கோயம்புத்தூர் நோக்கி வந்த அரசு பேருந்தை நிறுத்தி, உள்ளே இருந்த பயணிகளிடம் போலீசார் சோதனையிட்டனர். அப்போது பயணி ஒருவர் வைத்திருந்த கைப்பையில் தங்கக் கட்டிகள் இருந்தது தெரிய வந்தது. ஆனால் அதற்கான உரிய ஆவணங்கள் இல்லாததால் பயணியை கீழே இறக்கி விசாரணை மேற்கொண்டனர். விசாரணையில் பிடிபட்ட நபர் கேரளா மாநிலம் எர்ணாகுளத்தை சேர்ந்த நிபின் (29) என்பதும், இவர் அங்குள்ள துணிக்கடை ஒன்றில் பணியாற்றி வந்ததும் தெரிய வந்தது. மேலும், அவர் கோயம்புத்தூர் உக்கடம் பகுதியைச் சேர்ந்த சுரேஷ் என்பவரிடம் கொடுப்பதற்காக கேரளாவிலிருந்து 6.140 கிலோ தங்கக் கட்டிகளை எடுத்து வந்ததும் தெரியவந்தது. இதனையடுத்து உரிய ஆவணங்களின்றி எடுத்து வந்த தங்கக் கட்டிகளை பறிமுதல் செய்த போலீசார், அதனை வருமான வரித்துறை அதிகாரிகளிடம் ஒப்படைத்தனர். மேலும், விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.

Comments are closed.