எங்களுக்கு மரியாதைதான் வேண்டும், அதை தராவிட்டால் திருப்பி அடிப்போம் என்று காங்கிரஸ் எம்.பி. மாணிக்கம் தாகூர் எச்சரிக்கை விடுக்கும் வகையில் பேசியது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மதுரை, திருப்பரங்குன்றத்தில் விருதுநகர் நாடாளுமன்ற உறுப்பினர் மாணிக்கம் தாகூர் தலைமையில் காங்கிரஸ் செயற்குழு கூட்டம் நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில் திமுக கூட்டணியில் கூடுதல் இடம், காங்கிரஸ் கேட்கும் தொகுதிகளை திமுக வழங்க வேண்டும். ஆட்சி அதிகாரத்தில் பங்கு என்பது உள்ளிட்ட 7 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. இந்த கூட்டத்தில் மாணிக்கம் தாகூர் பேசுகையில், “பாஜகவை எதிர்க்கும் துணிச்சலும், தைரியமும் காங்கிரஸுக்கு மட்டும் தான் உள்ளது. அன்போடும், மரியாதையோடும் எங்களை நடத்தினால் நாங்களும் அப்படி இருப்போம். மரியாதை தராவிட்டால் திருப்பி அடிப்போம். சிறுமைப்படுத்தி பேசினால் அதே பாணியில் பதிலடி கொடுப்பவன்தான் காங்கிரஸ் காரன். தமிழகத்தில் 2016 முதல் திமுகவுடன் காங்கிரஸின் கூட்டணி தொடர்கிறது. இந்த கூட்டணி பல வெற்றிகளை பெற்றுள்ளது. ஆனால், திமுகவுடன் தொகுதிப் பங்கீடு பேச்சுவார்த்தை நடத்த 70 நாட்களாக நாம் காத்திருக்கிறோம். நாம் தோழமைக்கு மரியாதை கொடுக்கிறோம். அதை போலவே நாமும் எதிர்பார்க்கிறோம். காங்கிரஸ் கட்சி கப்பலை போல மிகப்பெரிய கட்சி. நான் கேட்பது மரியாதையும், அன்பும் மட்டும்தான். திமுகவின் மதுரை மாவட்ட செயலாளர் தளபதி, காங்கிரஸ் கட்சி குறித்து பேசும்போது வருத்தமாக இருக்கிறது. கூட்டணிக்கு காங்கிரஸ் வந்தால் வரட்டும். வராவிட்டால் போகட்டும் என ஒரு அமைச்சர் கூறுகிறார். இப்படி பேசுவது வலியை தருகிறது. நீங்கள் செய்த தவறுக்காக பழியை சுமந்தவர்கள் நாங்கள். ராகுல் காந்திக்கு திமுக தலைமை கொடுக்கும் முக்கியத்துவத்தை, காங்கிரஸில் கீழ் மட்டத்தில் இருப்பவர்களுக்கும் கொடுக்க வேண்டும் என்பதுதான் எங்களின் எண்ணம். காங்கிரஸ் கட்சியின் லட்சியமே மதுரை வடக்கு தொகுதி தான். அந்த தொகுதி நமக்கு நிச்சயமாக வேண்டும் என்று காங்கிரஸ் தலைவர் கார்கேவிடம் கூறியிருக்கிறேன். எங்களிடம் குறைவான ஆட்கள் இருக்கலாம். பணம் இல்லாமல் இருக்கலாம். ஆனால், எங்கள் ஆதரவு இல்லாமல் நீங்கள் (திமுக) அரியணை ஏறியிருக்க முடியாது என்பதை மறந்துவிடாதீர்கள்” இவ்வாறு அவர் பேசினார். அவரது இந்த பேச்சு அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது.

Comments are closed.