Rock Fort Times
Online News

வங்கியில் அடகு வைக்கப்பட்ட 533 பவுன் ஒரிஜினல் நகைகளை எடுத்து விட்டு டூப்ளிகேட் நகைகளை வைத்து மெகா மோசடி: மேலாளர் உள்பட 4 பேர் சிக்கினர்…!

சிவகங்கை மாவட்டம், காரைக்குடி அருகே கல்லல் பகுதியில் செயல்படும் தனியார் வங்கியில், மண்டல மேலாளர் கிருஷ்ணகுமார் தலைமையிலான குழுவினர் வருடாந்திர ஆய்வு மேற்கொண்டனர்.  அப்போது, கடந்த மே மாதம் முதல் செப்டம்பர் மாதம் வரை வங்கியில் அடமானம் வைக்கப்பட்ட நகைகளை ஆய்வு செய்தபோது அதிகாரிகளுக்கு சந்தேகம் எழுந்தது. இதையடுத்து அந்த நகைகளை பரிசோதனை செய்தபோது, வாடிக்கையாளர்கள் அடமானம் வைத்த தங்க நகைகளுக்கு பதிலாக, அந்த நகைகளைப் போலவே உள்ள கவரிங் நகைகள் வைக்கப்பட்டிருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. இதுகுறித்து நடத்தப்பட்ட விசாரணையில், வங்கி மேலாளர் உள்ளிட்ட பணியாளர்கள் இந்த மோசடியில் ஈடுபட்டது தெரியவந்தது.  மொத்தமாக வாடிக்கையாளர்கள் அடமானம் வைத்த 533 சவரன் தங்க நகைகள் மோசடி செய்யப்பட்டுள்ளன. இதன் மதிப்பு சுமார்  2 கோடியே 3 லட்சத்து 86 ஆயிரம் ரூபாய் என்று கூறப்படுகிறது.  இதுகுறித்து கிருஷ்ணகிரி மாவட்ட போலீசாரிடம் மண்டல மேலாளர் கிருஷ்ணகுமார் புகார் அளித்தார்.

புகாரின் அடிப்படையில் விசாரணை நடத்திய போலீசார், கல்லல் வங்கி மேலாளர் விக்னேஷ், உதவி மேலாளர் ராஜாத்தி, மோசடிக்கு உதவி செய்த ரமேஷ், சதீஷ் ஆகிய 4 பேரை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இதுகுறித்து தகவல் அறிந்த நகைகளை அடமானம் வைத்த வாடிக்கையாளர்கள் பதற்றம் அடைந்துள்ளனர்.  பொதுவாக பொதுமக்கள் தங்களது அவசர தேவைகளுக்கு நகைகளை அடமானம் வைத்து பணம் பெறுகிறார்கள்.  வெளியிடங்களில் அடமானம் வைத்தால் தங்களது நகைகளுக்கு பாதுகாப்பு இருக்காது, வட்டியும் அதிகம் என்பதாலேயே வங்கிகளை நாடுகின்றனர். வங்கியிலேயே மோசடி நடந்துள்ளது வாடிக்கையாளர்களை அதிர்ச்சி அடைய செய்துள்ளது.

Comments are closed.

Rockfort Times செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள வேண்டுமா? இல்லை ஆம்