Rock Fort Times
Online News

திரை இசை பயணத்தில் 50 ஆண்டுகள்: தமிழக அரசு சார்பில் இளையராஜாவுக்கு நாளை (செப்.13) சென்னையில் பாராட்டு விழா…* முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், ரஜினி, கமல் பங்கேற்பு

தமிழக அரசு சார்பில் இளையராஜாவுக்கு நாளை (செப்.13) பாராட்டு விழா நடத்தப்படுகிறது. இதுதொடர்பாக தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறி இருப்பதாவது:-

மறைந்த முன்னாள் முதலமைச்சர் கருணாநிதியால், அன்புமிளிர இசைஞானி என அழைத்துப் போற்றப்பட்டவர் இளையராஜா. தேனி மாவட்டம், பண்ணைபுரம் என்னும் பழைமையான கிராமத்தில் ஓர் எளிய குடும்பத்தில் பிறந்து ஞானதேசிகன் எனும் இயற்பெயர் பெற்றவர். இவரை கருணாநிதி போற்றியது போல், இசைஞானி என உலகிற்கு உயர்த்தியுள்ளது. இவர் பிறந்து வளர்ந்த கிராமிய சூழ்நிலைகளோடு கிராமப்புறப் பாடல்களைப் பாடி, புகழ் பெறத் தொடங்கியவர். முழு மேற்கத்திய பாரம்பரிய சிம்பொனி இசையமைத்து, பதிவு செய்து, நேரடியாக நிகழ்த்திய முதல் ஆசியர், முதல் இந்தியர், முதல் தமிழர் ஆவார். அவர் சிம்பொனியில் திருவாசகத்தையும் இயற்றிய பெருமைக்குரியவர். இசைஞானி இளையராஜா தமது இசைவாழ்வில் பல்வேறு விருதுகளைப் பெற்றுள்ளார். 2012-ம் ஆண்டில், இசைத்துறையில் அவரது படைப்பு மற்றும் சோதனைப்பணிகளுக்காக, இயல் இசை நாடக விருதைப் பெற்றுள்ளார். 2010-ம் ஆண்டில், பத்ம பூஷண் விருதையும், 2018 ம் ஆண்டில் பத்ம விபூஷண் விருதையும் பெற்றவர். ஒரு குக்கிராமத்தில் பிறந்து இசைத்திறனால் உலகப் புகழ் குவித்துள்ள இளையராஜாவின் இல்லத்திற்கே முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நேரில் சென்று, 8.3.2025அன்று லண்டன் மாநகரில் முதல் நேரடி சிம்பொனி இசைநிகழ்ச்சி நடத்தவிருந்த நிலையில் அவரைப் பாராட்டி, அவருக்கு நினைவுப் பரிசு வழங்கி வாழ்த்துத் தெரிவித்தார். அதனைத் தொடர்ந்து, லண்டன் மாநகர் சென்று சிம்பொனி சாதனை நிகழ்த்தி வெற்றியுடன் சென்னை திரும்பிய நிலையில் 13.3.2025 அன்று இளையராஜா முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இல்லத்திற்கு சென்று நன்றி தெரிவித்தார். இதைத் தொடர்ந்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வெளியிட்ட பதிவில், “லண்டன் மாநகரில் சிம்பொனி சாதனை படைத்து திரும்பிய இசைஞானி இளையராஜாவின் அரை நூற்றாண்டு காலத் திரையிசைப் பயணத்தை தமிழக அரசின் சார்பில் கொண்டாட முடிவெடுத்துள்ளோம்.” ரசிகர்களின் பங்கேற்போடு இந்த விழா சிறக்கும் என குறிப்பிட்டிருந்தார். அதன்படி நாளை (சனிக்கிழமை) மாலை 5.30 மணியளவில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் சென்னை, நேரு உள்விளையாட்டு அரங்கில் திரையுலகில் பொன் விழா காணும் சிகரம் தொட்ட தமிழன் இசைஞானி இளையராஜாவுக்கு தமிழ்நாடு அரசின் சார்பில் மிகப்பெரிய அளவில் பாராட்டு விழா நடைபெற உள்ளது. இந்தப் பாராட்டு விழாவின் தொடக்கத்தில் இளையராஜாவின் சிம்பொனி-இன்னிசை நிகழ்ச்சி நடைபெறும். துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் வரவேற்புரை ஆற்றுகிறார். முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இளையராஜாவுக்கு நினைவுப் பரிசு வழங்கி விழாத் தலைமை உரை ஆற்றுகிறார். நடிகர்கள் கமல்ஹாசன் எம்.பி., ரஜினிகாந்த் வாழ்த்துரை வழங்குகிறார்கள். இதில் அமைச்சர்கள், மேயர், எம்.பி., எம்.எல்.ஏ.க்கள், துணை மேயர், உள்ளாட்சி அமைப்புகளின் பிரதிநிதிகள், தமிழ்த் திரைப்பட தயாரிப்பாளர்கள், இயக்குநர்கள், திரைக் கலைஞர்கள், திரைத் தொழில்நுட்ப வல்லுநர்கள் மற்றும் தமிழ்த் திரையுலக முக்கிய பிரமுகர்கள் முதலானோரும் பங்கேற்கிறார்கள். நிறைவாக இசைஞானி இளையராஜா எம்.பி., ஏற்புரை வழங்குகிறார். இறுதியில் தமிழ்வளர்ச்சி மற்றும் செய்தித்துறை அமைச்சர் மு.பெ.சாமிநாதன் நன்றி கூறுகிறார். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது. இந்த விழாவில் பங்கேற்பதற்காக சிம்பொனி கலைஞர்கள் 86 பேர் லண்டன் உள்ளிட்ட ஐரோப்பிய நாடுகளில் இருந்து இன்று சென்னை வந்துள்ளனர்.

Comments are closed.

Rockfort Times செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள வேண்டுமா? இல்லை ஆம்