தமிழகத்தில் கடந்த மார்ச் மாதம் 28ம் தேதி தொடங்கிய எஸ் எஸ் எல் சி பொதுத்தேர்வு நேற்றுடன்( ஏப்ரல் 15) நிறைவடைந்தது. ஈரோடு மாவட்டம், பவானியை சேர்ந்த 4 மாணவிகளும் சித்தோடு பகுதியை சேர்ந்த ஒரு மாணவி என ஐந்து மாணவிகள் தேர்வு முடிந்து நீண்ட நேரம் ஆகியும் வீடு திரும்ப வில்லை. அவர்களது பெற்றோர்கள் மற்றும் உறவினர்கள் பல்வேறு இடங்களில் தேடியும் அவர்களை கண்டுபிடிக்க முடியவில்லை. இதனால் பதற்றம் அடைந்த பெற்றோர்கள், பவானி காவல் நிலையத்தில் புகார் கொடுத்தனர். புகாரின் அடிப்படையில் பவானி துணை போலீஸ் சூப்பிரண்டு மேற்பார்வையில் நடத்தப்பட்ட விசாரணையில் பள்ளிக்கூடத்தில் இருந்து 5 மாணவிகளும் மதியம் 1-20 மணிக்கு வெளியேறியது தெரியவந்தது. பள்ளிக்கூடத்தில் இருந்து புறப்பட்ட மாணவிகள் எங்கு சென்றார்கள்?,என்ன ஆனார்கள்? அவர்களை யாரேனும் கடத்திச் சென்றார்களா ?என்று தீவிர விசாரணை நடத்தப்பட்டது . மேலும், அப்பகுதியில் உள்ள கண்காணிப்பு கேமராக்களில் பதிவான காட்சிகளையும் போலீசார் பார்வையிட்டு அவர்களை தீவிரமாக தேடி வந்தனர். இந்நிலையில் மாயமான 5 மாணவிகளும் திருச்சி மாவட்டம் சமயபுரம் மாரியம்மன் கோவிலுக்கு வந்துள்ளனர். நேற்று சமயபுரம் மாரியம்மன் கோவில் தேரோட்டம் நடைபெற்றதால் அங்கு பாதுகாப்பு பணியில் ஈடுபட்ட போலீசார் மாணவிகளிடம் விசாரித்துள்ளனர். அப்போது அவர்கள் தேர்வை முடித்துவிட்டு பெற்றோர்களிடம் தகவல் தெரிவிக்காமல் சாமி கும்பிட சமயபுரம் மாரியம்மன் கோவிலுக்கு வந்தது தெரிய வந்தது. அவர்களை மீட்ட போலீசார் பவானி அழைத்து சென்று அங்குள்ள போலீசாரிடம் ஒப்படைக்கப்பட உள்ளனர். அங்கு அவர்களது பெற்றோர்கள் வரவழைக்கப்பட்டு மாணவிகள் ஒப்படைக்கப்படுவார்கள் என்று கூறப்படுகிறது.
Comments are closed.