திருச்சி கோட்டை பகுதி சஞ்சீவி நகரைச் சேர்ந்தவர் சசிக்குமார். தனியார் நிறுவன விற்பனை மேலாளரான இவர் தனது குடும்பத்தினருடன் 23 பவுன் நகைகள் அடங்கிய பையுடன் கோட்டை பகுதியிலிருந்து மத்திய பேருந்து நிலையம் செல்லும் தனியார் நகர பேருந்தில் சென்று கொண்டு இருந்தார். அப்போது பேருந்தில் வைக்கப்பட்டிருந்த பையை காணவில்லை. இதனால் அதிர்ச்சி அடைந்த அவர், இதுகுறித்து பாலக்கரை போலீஸில் புகார் செய்தார். இது குறித்து தகவலறிந்த மாநகர காவல் ஆணையர் காமினி, உடன் நடவடிக்கை எடுக்க உத்தரவிட்டார். அதன்பேரில், பாலக்கரை போலீசார் வழக்குப்பதிந்து பேருந்து நிறுத்தங்களில் உள்ள கண்காணிப்பு காமிராக்களின் பதிவுகளை ஆய்வு செய்து விசாரணை மேற்கொண்டனர். இதில், மர்ம நபர்கள் சிலர் பையுடன் செல்வது பதிவாகியிருந்தது. அதன்பேரில், போலீசார் மேற்கொண்ட விசாரணையில் ஸ்ரீரங்கம் அழகிரிபுரத்தை சேர்ந்த அப்துல் அஜீஸ் என்கிற வெள்ளை ராஜா (42), தென்னூரைச் சேர்ந்த சூசைராஜ் (34), யாசர்அரபாத் (29), அரியமங்கலத்தைச் சேர்ந்த சேக்தாவூது, உதவியாக இருந்த பீமநகரை சேர்ந்த அன்வர் சாதிக் (49) ஆகிய ஐந்துபேரும் பேருந்திலிருந்து பையை திருடியது தெரியவந்தது. இதனையடுத்து அவர்கள் 5 பேரையும் கைது செய்த போலீசார், அவர்களிடமிருந்த நகைகளை மீட்டனர். சம்பவம் நடந்த இரண்டு நாட்களில் நகை பையை திருடியவர்களை கைது செய்த போலீசாரை மாநகர காவல் ஆணையர் பாராட்டினார்.

Comments are closed, but trackbacks and pingbacks are open.