கரூர் கூட்ட நெரிசலில் சிக்கி 41 பேர் உயிரிழப்பு: புஸ்ஸி ஆனந்த், நிர்மல்குமார் ஜாமீன் மனுக்கள் தள்ளுபடி…!
கரூரில், தவெக தலைவர் விஜய் பிரச்சாரம் செய்த போது நிகழ்ந்த கூட்ட நெரிசலில் சிக்கி 41 பேர் உயிரிழந்தனர். இதுதொடர்பாக வழக்குப் பதிவு செய்யப்பட்ட நிலையில், முன் ஜாமீன் கோரி தவெக பொதுச் செயலாளர் புஸ்ஸி ஆனந்த் மற்றும் இணை செயலாளர் நிர்மல் குமார் ஆகியோர் தாக்கல் செய்த மனுக்கள் உயர் நீதிமன்ற மதுரை கிளையில் இன்று(3-10-2025) பிற்பகல் விசாரணைக்கு வந்தது. நீதிபதி ஜோதிராமன் முன்பு நடைபெற்ற விசாரணையில் மனுதாரர் தரப்பிலும், தமிழக அரசு தரப்பிலும் மாறி மாறி காரசார விவாதங்கள் முன் வைக்கப்பட்டன. வேலுச்சாமிபுரத்தில் பிரச்சாரம் நடந்து கொண்டிருக்கும் போதே காலி ஆம்புலன்ஸ்கள் கூட்டத்திற்கு நடுவே கொண்டு வரப்பட்டன. இதனால் விபத்து ஏற்பட்ட நிலையில், விபத்துகளை விபத்துகளாக பார்க்காமல், பொதுச் செயலாளர் மீது எப்படி வழக்கு பதிவு செய்ய முடியும்” என அவரது வழக்கறிஞர் கேள்வி எழுப்பினார். கூட்டத்தை கட்டுப்படுத்துவது அரசின் கடமை என்றும், திமுக நிகழ்ச்சியில் முதல்வர் பங்கேற்கும் போது இதுபோன்று நடந்தால் முதல்வர் மற்றும் மாவட்ட செயலாளர்கள் மீது வழக்கு பதிவு செய்வீர்களா? எங்கள் கட்சிக்கு ஒரு நியாயம், திமுகவிற்கு ஒரு நியாயமா? எனவும் தவெக சார்பில் வாதம் முன் வைக்கப்பட்டது. இதற்கு போலீசார் தரப்பில், வழக்கு விசாரணை ஆரம்ப நிலையில் இருப்பதாகவும், தவெகவினர் தங்கள் கடமையை சரியாக செய்யவில்லை எனவும் கூறப்பட்டது. இதனையடுத்து, தங்கள் கட்சித் தலைவர் மதியம் 12 மணிக்கு வருவார் என இவர்கள் அறிவித்ததே, 41 பேரின் மரணத்தில் இவர்களுக்கு இருக்கும் தொடர்பு என அரசு தரப்பில் குற்றம்சாட்டப்பட்டது. இருதரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதி இந்த விவகாரம் தொடர்பாக காவல் துறை என்ன நடவடிக்கை எடுத்துள்ளது? என கேள்வி எழுப்பினார். அதற்கு, ரோடு ஷோ நடத்த அனுமதி வழங்கப்படாத நிலையில், நடத்தியதாக அரசு தரப்பில் கூறப்பட்டதற்கு, அப்படி என்றால் நிகழ்ச்சியை ஏன் ரத்து செய்யவில்லை என நீதிபதி பதில் கேள்வி எழுப்பினார். பிரச்சினை எழக்கூடாது என்று தான் அவ்வாறு செய்யவில்லை என அரசு தரப்பில் பதிலளிக்கப்பட்டது. கூடியிருந்த தொண்டர்களுக்கு குடிநீர் கூட வழங்கவில்லை எனவும், அதனால் சோர்வு ஏற்பட்டதாகவும் கூறியதோடு, இதுகுறித்து ஆணையம் விசாரணை நடத்தி வருவதால் முன் ஜாமீன் வழங்கக் கூடாது எனவும் காவல்துறை சார்பில் வாதிடப்பட்டது. அதற்கு மனுதாரர்கள் தரப்பில், கூட்டத்தில் ஸ்ப்ரே அடிக்கப்பட்டதும், தடியடி நடத்தியதுமே நெரிசலுக்கு காரணம் என்று கூறப்பட்ட நிலையில், முன் ஜாமின் குறித்து மாலை அறிவிப்பதாக கூறிய நீதிபதி தீர்ப்பை ஒத்தி வைத்தார். இந்நிலையில், நீதிமன்றம் மீண்டும் கூடியபோது ஆனந்துக்கு ஜாமீன் வழங்க இயலாது என்ற நீதிபதி, அவரது மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டார். இதேபோல நிர்மல் குமாரின் ஜாமீன் மனுவும் தள்ளுபடி செய்யப்பட்டது. இதனால் அவர்கள் எந்த நேரத்திலும் கைது ஆவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Comments are closed.