திருச்சி சத்திரம் பேருந்து நிலையத்தில் மாநகராட்சிக்கு சொந்தமான வணிக வளாகத்தில் ஏராளமான கடைகள் அமைந்துள்ளன. இதில் 49 ஆவது எண் கடையை குத்தகைக்கு எடுத்திருந்த சிந்தாமணி, காந்திநகரைச் சேர்ந்த எஸ்.எம். சேட்டு (43) என்றவா், அந்த கடையை சக்திவேல் என்பவருக்கு உள் வாடகைக்கு விட்டிருப்பதாக புகார் வந்தது. அதன் பேரில் மாநகராட்சி மண்டலம் 1, உதவி வருவாய் அலுவலர் த. குமரேஷ் (51) தலைமையில், மாநகராட்சி ஊழியர்கள் வணிக வளாகத்திக்குச் சென்று சோதனை மேற்கொண்டனர். இதில் கடையை உள் வாடகைக்கு விட்டிருந்தது உறுதியானது. மாநகராட்சி விதிகளின்படி கடையை ஒப்பந்த ஏலத்தில் எடுத்தவர்கள் உள்வாடகைக்கு விடக்கூடாது என்பதால், அந்தக் கடையை பூட்டி சீல்வைக்கும் நடவடிக்கையில் மாநகராட்சி பணியாளர்கள் இறங்கினர். இதற்கு எதிர்ப்புத் தெரிவித்து சேட்டு மற்றும் அவரது ஆதரவாளர்கள் மாநகராட்சி அலுவலர் மற்றும் பணியாளர்களை மிரட்டியுள்ளனர். இது குறித்த புகாரின்பேரில் கோட்டை போலீசார் வழக்குப் பதிவு செய்து, சேட்டு மற்றுமு் கொடியாலத்தைச் சேர்ந்த மு.தட்சிணாமூர்த்தி (32), கிளியநல்லூர் மா.ஆகாஷ் (22), சிந்தாமணி ரா. வீரமணி (24 ) ஆகியோரை கைது செய்தனா்.

Comments are closed, but trackbacks and pingbacks are open.