ஸ்ரீரங்கம் பட்டர் தோப்பு பகுதியில் பட்டர்குலாம் என்ற வேதபாடசாலை செயல்பட்டு வருகிறது. தமிழகம் மற்றும் பிற மாநிலங்களில் இருந்து சுமார் 50க்கும் மேற்பட்ட மாணவர்கள் இங்கு தங்கி வேதம் பயின்று வருகிறார்கள். இந்த பாடசாலையை ஆடிட்டர் பத்ரிநாராயணன் பட்டர் என்பவர் நிர்வகித்து வருகிறார்.
இந்நிலையில் திருவாரூர் மாவட்டம் மன்னார்குடியை சேர்ந்த விஷ்ணுபிரசாத்(13), ஹரிபிரசாத்(14), ஈரோடு பகுதியை சேர்ந்த கோபாலகிருஷ்ணன்(12), ஆந்திர மாநிலம் குண்டூரை சேர்ந்த அபிராம்(13) ஆகிய 4 மாணவர்கள் ஸ்ரீரங்கம் யாத்ரிநிவாஸ் எதிரே கொள்ளிடம் ஆற்றில் இன்று காலை 6 மணியவில் குளித்து கொண்டிருந்தனர். அப்போது எதிர்பாரதவிதமாக நால்வரும் ஆழமான பகுதிக்கு தண்ணீரால் இழுத்து செல்லப்பட்டனர். இதில் கோபாலகிருஷ்ணன் மட்டும் ஆழமான பகுதியிலிருந்து தப்பி கரைக்கு வந்தான். மற்ற மூவரும் தண்ணீரில் மூழ்கினர். இதனை கண்ட கோபாலகிருஷ்ணன் இதுகுறித்து வேதபாடசாலைக்கு தகவல் தெரிவித்தான். வேதபாடசாலையில் இருந்து ஸ்ரீரங்கம் தீயணைப்பு நிலையத்திற்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த ஸ்ரீரங்கம் தீயணைப்பு படை வீரர்கள் சுமார் 25 பேர் ஆற்றில் மூழ்கிய 3 மாணவர்களையும் தேடும் பணியில் ஈடுபட்டனர். அப்போது மன்னார்குடியை சேர்ந்த விஷ்ணுபிரசாத்(13) பிணமாக மீட்கப்பட்டார். மற்ற இரண்டு மாணவர்களையும் தீயணைப்பு படை வீரர்கள் தொடர்ந்து தேடி வருகின்றனர். ஸ்ரீரங்கம் மூலத்தோப்பு அகிலாண்டேஸ்வரி கார்டன் காவிரி ஆற்றுப்பகுதியில் கூட்டுக்குடிநீர் திட்டத்திற்காக கிணறு தோண்டும் பணி நடந்து வருவதால் காவிரி ஆற்று தண்ணீர் கொள்ளிடம் ஆற்றிற்கு திருப்பிவிடப்பட்டது. இதனால் வழக்கத்தை விட கொள்ளிடம் ஆற்றில் கூடுதல் தண்ணீர் வேமாக சென்றதால் தான் மாணவர்கள் தண்ணீரில் மூழ்கி இறக்கும் நிலை ஏற்பட்டதாக கூறப்படுகிறது.

இந்நிலையில் கலெக்டர் பிரதீப்குமார் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் : திருவானைக்காவல் பகுதியில் கொள்ளிடம் ஆற்றில் மூழ்கிய மாணவர்களை தேடும் பணி தொடர்ந்து நடைபெற்று வருகிறது. எனவே முக்கொம்பு மேலணையில் இருந்து கொள்ளிடம் ஆற்றில் திறக்கப்படும் 1903 கன அடி தண்ணீர் முற்றிலும் இன்று(14-ந்தேதி) காலை 11.30 மணியளவில் இருந்து நிறுத்தப்பட்டுள்ளது. தற்பொழுது கொள்ளிடம் கதவணையின் அனைத்து மதகுகளும் அடைக்கப்பட்டுள்ளன. தண்ணீரில் மூழ்கிய சிறுவர்கள் கிடைக்கப்பெறும் வரை கொள்ளிடக்கதவணையின் மதகுகள் முற்றிலும் அடைக்கப்படும். காவிரி ஆற்றில் வரும் தற்போதைய 1903 கன அடி நீர்வரத்தினை சுமார் 8 மணிநேரம் வரை மட்டுமே முக்கொம்பு மேலணையில் தேக்கி வைக்க இயலும். மேலணையின் முழு கொள்ளவை எட்டியவுடன் மேலணைக்கு வரும் 1903கன அடி தண்ணீர் காவிரி ஆற்றில் திறக்கப்படும். இதற்கிடையில் தண்ணீரில் மூழ்கியவர்கள் கிடைக்கப்பெற்ற உடன் கொள்ளிடம் ஆற்றில் மீண்டும் தண்ணீர் திறக்கப்படும் என தெரிவிக்கப்படுகிறது என அவர் அந்த செய்தி குறிப்பில் தெரிவித்துள்ளார்

Comments are closed, but trackbacks and pingbacks are open.