Rock Fort Times
Online News

திருச்சி பிஷப் ஹீபர் கல்லூரியில் ஒரே வாரத்தில் 3 மாணவர்கள் அடுத்தடுத்து மரணம்- * அதிர்ச்சியில் பெற்றோர்கள்…!

திருச்சி பிஷப் ஹீபர் கல்லூரியில் படித்த பல மாணவ, மாணவிகள் அரசு உயர் பதவிகளிலும், தனியார் நிறுவனங்களிலும், வெளிநாடுகளிலும் நல்ல வேலையில் இருக்கின்றனர். ஆனால், அண்மையில் அந்த கல்லூரியில் படிக்கும் 3 மாணவர்கள் அடுத்தடுத்து உயிரிழந்த சம்பவம் பெற்றோர்கள் மற்றும் சக மாணவர்கள் மத்தியில் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது. திருச்சி, தென்னூர் சின்னசாமி நகரை சேர்ந்தவர் தனவீரன். இவரது மகன் பிரவீன் ( வயது 20). இவர் பிஷப் ஹீபர் கல்லூரியில் பி.ஏ பொருளாதாரம் மூன்றாம் ஆண்டு படித்து வந்தார். இவர் ஒரு பெண்ணை ஒருதலையாக காதலித்து வந்துள்ளார். இதனை பிரவீனின் பெற்றோர் கண்டித்ததாக தெரிகிறது. இதனால் மனமுடைந்த பிரவீன் விஷத்தை சாப்பிட்டு தற்கொலைக்கு முயன்றார். திருச்சி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கபட்ட அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டும் சிகிச்சை பலனளிக்காமல் ஜூலை 7ம் தேதி இரவு பரிதாபமாக உயிரிழந்தார். 8ம் தேதி பிரவீன் உடல் பிரேத பரிசோதனை முடிந்து பெற்றோரிடம் ஒப்படைக்கப்பட்டது. அரசு ஆஸ்பத்திரியில் இருந்து பிரவீன் உடல் ஊர்வலமாக கொண்டு செல்லப்பட்டது. அப்போது அவரது கல்லூரி நண்பர்கள் சாலைகளில் வெடி வெடித்தபடி சென்றனர். அப்போது ஒரு வாலிபர் கையில் வைத்திருந்த பெரிய வெடி வெடித்து சிதறியது. இதில் அவருக்கு கை, வயிறு, கால் போன்ற பகுதிகளில் பலத்த தீக்காயம் ஏற்பட்டது. அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த அந்த மாணவரும் நேற்று காலை உயிரிழந்தார். பாலக்கரை பகுதியை சேர்ந்த டேனி(19) என்ற அந்த மாணவரும் பிஷப் ஹீபர் கல்லூரியில் இரண்டாம் ஆண்டு படித்து வந்தவர் ஆவார். இதற்கிடையில் நேற்று மாலை பிஷப் ஹீபர் கல்லூரி விடுதி கழிவறையில் மாணவர் ஒருவர் துாக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார். விசாரணையில் அவர் அரியலூர் மாவட்டம், திருமானூரை சேர்ந்த வெங்கடேசன் மகன் அபிஷேக்(19) என்பதும், அவரது நடத்தை குறித்து கல்லூரி நிர்வாகம் பெற்றோரிடம் புகார் தெரிவித்ததால் மனமுடைந்து தற்கொலை செய்து கொண்டதும் தெரியவந்தது. ஒரு வாரத்துக்குள் ஒரே கல்லூரியில் படித்த 3 மாணவர்கள் அடுத்தடுத்து மரணமடைந்திருப்பது பெற்றோர்கள் மற்றும் சக மாணவர்கள் மத்தியில் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Comments are closed.

Rockfort Times செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள வேண்டுமா? இல்லை ஆம்