திருச்சி மத்திய பேருந்து நிலையத்தில் உள்ள தனியார் ஹோட்டலில் 17 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்தும், கட்டாயப்படுத்தி பாலியல் தொழிலில் ஈடுபடுத்துவதாகவும் தகவல் வந்தது. தகவலின்படி விசாரணை மேற்கொண்டதில், கன்னியாகுமரி மாவட்டத்தை சேர்ந்த பாக்கியராஜ் மகன் பிரபின் கிறிஸ்டல்ராஜ் (வயது 40) திருச்சி சுப்ரமணியபுரத்தை சேர்ந்த ரமீஜா பானு (வயது 50) என்பவருடன் சேர்ந்து 17 வயது சிறுமி ஒருவரை ஏமாற்றி, கட்டாயப்படுத்தி பாலியல் தொழிலில் ஈடுபடுத்தியது தெரியவந்தது. இது சம்மந்தமாக பாதிக்கப்பட்ட சிறுமியை விசாரித்த மாவட்ட குழந்தை நல அலுவலர் கொடுத்த புகாரின்பேரில் கண்டோன்மெண்ட் அனைத்து மகளிர் காவல்நிலையத்தில் போக்சோ, விபச்சார தடுப்பு மற்றும் குழந்தை திருமணம் தடுப்பு சட்டம் ஆகிய சட்டங்களின் உரிய பிரிவுகளின் கீழ் வழக்குபதிவு செய்தனர். மேலும் விசாரணையில், பிரபின் கிறிஸ்டல்ராஜ் கடந்த 15 வருடங்களாக தொலைகாட்சி நிறுவனங்களில் நிருபராக வேலை பார்த்து, தற்போது “சிலந்தி வலை” என்ற மாதாந்திர பத்திரிக்கையில் நிருபராக பணிபுரிவதும் தெரியவந்தது. சிறுமியின் தாயாரும் உடந்தை என்பது தெரியவந்தது. மேற்படி எதிரிகள் மூவரும் உடனடியாக கைது செய்யப்பட்டு நீதிமன்ற காவலுக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். மேலும் திருச்சி மாநகரில் பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிராக குற்றங்களில் ஈடுபடும் நபர்கள் மீது கடுமையான நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என திருச்சி மாநகர காவல் ஆணையர் சத்தியப்ரியா ஐ.பி.எஸ் எச்சரிக்கை விடுத்துள்ளார்.