Rock Fort Times
Online News

லஞ்சம் வாங்கிய வழக்கில் மருந்து கட்டுப்பாட்டு அதிகாரி உட்பட 3 பேருக்கு சிறை தண்டனை

திருச்சி உறையூரை சேர்ந்தவர் அன்பரசு. இவர் உறையூர் பகுதியில் மருத்துவ உபகரணங்கள் விற்பனை செய்யும் மையம் தொடங்க உரிமம் வேண்டி திருச்சி தில்லை நகரில் உள்ள மருந்துக் கட்டுப்பாடுத் துறை உதவி இயக்குநர் அலுவலகத்தில் விண்ணப்பித்து இருந்தார். உரிமம் வழங்க அப்போதைய மருந்துக் கட்டுப்பாடு உதவி இயக்குநர் பார்த்திபனும், முதுநிலை ஆய்வாளர் சிவபுண்ணியமும் ரூ.7 ஆயிரம் லஞ்சம் கேட்டதாக கூறப்படுகிறது. அந்த பணத்தை தில்லை நகரில் உள்ள ஒரு மெடிக்கலில் கொடுக்கும்படி கேட்டுக் கொண்டனர். லஞ்சம் கொடுக்க விரும்பாத அன்பரசு இதுகுறித்து அப்போதைய திருச்சி ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்புப் பிரிவு துணைக் கண்காணிப்பாளர் ராம.அம்பிகாபதியிடம் புகார் செய்தார். அதன்பேரில், ரசாயனம் தடவிய ரூபாய் நோட்டுகளை அன்பரசுவிடம் கொடுத்து, அதனை மெடிக்கலில் கொடுக்கச் செய்தார். அதன்படி, அன்பரசு அந்தப் பணத்தை சம்பந்தப்பட்ட மெடிக்கல் விற்பனையாளர் சேகரிடம் கொடுத்தார். அப்போது அங்கு தனது குழுவினருடன் மறைந்திருந்த அம்பிகாபதி , சேகர் மற்றும் பார்த்திபன், சிவபுண்ணியம் ஆகியோரை கைது செய்தார். இந்த சம்பவம் 19.5.2008 அன்று நடந்தது.
இவ்வழக்கானது, திருச்சி ஊழல் தடுப்பு சிறப்பு நீதிமன்றத்தில் நடந்து வந்தது. தற்போதைய லஞ்ச ஒழிப்பு துணைக் கண்காணிப்பாளர் மணிகண்டன் மற்றும் இன்ஸ்பெக்டர் சக்திவேல் ஆகியோர் சாட்சிகளை நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தினர். இந்த வழக்கில் விசாரணை முடிந்து இன்று (6.7.2023) தீர்ப்பளிக்கப்பட்டது. உதவி இயக்குநர் பார்த்திபன் மற்றும் சிவபுண்ணியத்திற்கு தலா 4 ஆண்டுகள் சிறை தண்டனையும், தலா ரூ.20 ஆயிரம் அபராதமும், சேகருக்கு 3 ஆண்டுகள் சிறைத் தண்டனையும், ரூ.10 ஆயிரம் அபராதமும் விதித்து சிறப்பு நீதிபதி கார்த்திகேயன் தீர்ப்பளித்தார். முன்னதாக உதவி இயக்குநரான பார்த்திபன் கோவையில் பணியாற்றிய போது ஊழல் வழக்கில் கோவை லஞ்ச ஒழிப்புத் துறையால் கைது செய்யப்பட்டு கோவை நீதி மன்றத்தால் விடுவிக்கப்பட்டார் என்பதும், முதுநிலை ஆய்வாளர் சிவபுண்ணியம் இதற்கு முன்பு சிவகங்கையில் பணியாற்றியபோது அவர் மீது ஊழல் புகார் காரணமாக விசாரணை செய்யப்பட்டு அவர் மீது தீர்ப்பாயத்தில் விசாரணை நிலுவையில் இருந்தது என்பதும் குறிப்பிடத்தக்கது.

Comments are closed, but trackbacks and pingbacks are open.

Rockfort Times செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள வேண்டுமா? இல்லை ஆம்