திருச்சி மாநகர காவல் ஆணையராக என். காமினி ஐபிஎஸ் பொறுப்பேற்றதிலிருந்து சட்டம்-ஒழுங்கு மற்றும் பொது அமைதிக்கு பங்கம் விளைவிப்பவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுத்து வருகிறார். இந்நிலையில் கடந்த(05.11.2023)-ந்தேதி ஸ்ரீரங்கம் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பாரதி நகரில் ஒரு பெண் வீட்டிலிருந்தபோது சில நபர்கள் அவரை தகாத வார்த்தையால் திட்டி நாட்டு வெடிகளை வீசிவிட்டு தப்பி சென்று விட்டனர். இது குறித்த புகாரின்பேரில் ஸ்ரீரங்கம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும், அங்குள்ள சிசிடிவி கேமராக்களை ஆய்வு செய்தும், புகார்தாரர் அடையாளம் தெரிவித்த நபர்களை பற்றி புலன் விசாரணை நடத்தினர். இந்நிலையில் அந்தப் பெண்ணின் வீட்டின் முன்பு நாட்டு வெடிகளை வீசியதாக வரதராஜன் (வயது 23), முகேஷ் (23), சடையன் என்கிற அய்யப்பன் என்பது தெரிய வந்தது. தலைமறைவாக இருந்த அவர்கள் 3 பேரையும் போலீசார் சுற்றி வளைத்து பிடிக்க முயன்றபோது வரதராஜன், முகேஷ் ஆகியோர் தப்பிக்க முயன்று காம்பவுண்ட் சுவர் ஏறிக் குதித்தனர். இதில், அவர்களுக்கு இடது கையில் எலும்பு முறிவு ஏற்பட்டது. அவர்களை மடக்கி பிடித்து கைது செய்த போலீசார், திருச்சி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர் . பின்னர் அவர்களிடம் விசாரணை நடத்தப்பட்டதில், வரதராஜ் மீது அடிதடி, வழிப்பறி, போக்சோ என 5 வழக்குகளும், முகேஷ் மீது அடிதடி வழக்கு, வழிப்பறி என 3 வழக்குகள் நிலுவையில் இருப்பது தெரிய வந்தது. பின்னர் அவர்கள் 3 பேரையும் நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தி சிறையில் அடைத்தனர். இந்த வழக்கில் சம்பந்தப்பட்டவர்களை விரைவாக கைது செய்த போலீசாரை மாநகர போலீஸ் கமிஷனர் என். காமினி ஐபிஎஸ் வெகுவாக பாராட்டினார்.

Comments are closed, but trackbacks and pingbacks are open.