தமிழக சட்டப்பேரவை கூட்டத்தொடரின் 2வது நாள் அமர்வு இன்று(13-02-2024) தொடங்கியது. கூட்டத்தில், மறைந்த உறுப்பினர்கள் வடிவேலு, தெய்வநாயகம், தங்கவேல், துரை ராமசாமி, கு.க.செல்வம், எஸ்.ராஜசேகரன் உள்ளிட்டோருக்கு இரங்கல் குறிப்பு வாசிக்கப்பட்டது. தமிழக முன்னாள் கவர்னர் பாத்திமா பீவி, ஒடிசா முன்னாள் கவர்னர் ராஜேந்திரன், ரிசர்வ் வங்கியின் முன்னாள் கவர்னர் வெங்கட்ராமன், புகழ்பெற்ற கண் மருத்துவர் பத்ரிநாத் ஆகியோர் மறைவுக்கு இரங்கல் தீர்மானம் வாசிக்கப்பட்டது. மேலும், தே.மு.தி.க. தலைவரும், முன்னாள் எதிர்க்கட்சி தலைவருமான விஜயகாந்த் மறைவுக்கு இரங்கல் தெரிவித்து தீர்மானம் வாசிக்கப்பட்டது. விஜயகாந்த் குறித்து சட்டசபையில் சபாநாயகர் அப்பாவு கூறுகையில், கேப்டன் என்று புகழ் பெற்றவர், பத்ம பூஷண் விருதுக்கு தேர்வு பெற்றவர் விஜயகாந்த். 2006 முதல் 2016 வரை சட்டசபை உறுப்பினராக இருந்தவர். 2011ம் ஆண்டு சட்டசபையின் எதிர்க்கட்சி தலைவராக சிறப்பாக செயல்பட்டவர் விஜயகாந்த் என்று புகழாரம் சூட்டினார். தொடர்ந்து விஜயகாந்த் மறைவுக்கு சட்டசபை உறுப்பினர்கள் மௌன அஞ்சலி செலுத்தினார்கள். இதையடுத்து 2-வது நாளாக கேள்வி நேரம் தொடங்கியது.

Comments are closed, but trackbacks and pingbacks are open.