திருச்சி மாவட்டத்தில் ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சிப் பணிகள் திட்டத்தின் கீழ் காலியாகவுள்ள 296 பணியிடங்களுக்கு பெண்கள் மட்டும் விண்ணப்பிக்கலாம் என்று மாவட்ட ஆட்சியர் மா.பிரதீப்குமார் கேட்டுக் கொண்டுள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள ஒரு செய்தி குறிப்பில் தெரிவித்திருப்பதாவது: திருச்சி மாவட்டத்தில் செயல்படும் குழந்தைகள் மையங்களில் அங்கன்வாடி பணியாளர்கள் 17 பேர், குறு அங்கன்வாடி பணியாளர் 17 பேர், அங்கன்வாடி உதவியாளர்கள் 262 பேர் என மொத்தம் 296 பணியிடங்கள் காலியாக உள்ளன. அவற்றில் வட்டாரம், திட்டம் வாரியாக நேரடி நியமனம் செய்யப்படவுள்ளன. காலிப் பணியிட விவரம் மாவட்ட திட்ட அலுவலகத்திலும், அந்தந்த வட்டார குழந்தைகள் வளர்ச்சி திட்ட அலுவலகங்களிலும் தகவல் பலகையில் ஒட்டப்படும். இதற்கு தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் விண்ணப்பங்களை www.icds.tn.gov.in என்ற இணையதளத்தில் பதிவிறக்கம் செய்து, பூர்த்தி செய்து ஏப்ரல் 24-ம் தேதி மாலை 5.45 மணிக்குள் விண்ணப்பிக்க வேண்டும். அங்கன்வாடி பணியாளருக்கு தொகுப்பூதியமாக ரூ.7,700 வழங்கப்படும். பின்னர் 12 மாதங்களுக்கு பிறகு சிறப்பு காலமுறை ஊதியத்தில் ரூ.24,200-ம் நிர்ணயம் செய்யப்படும். குறு அங்கன்வாடி பணியாளருக்கு தொகுப்பூதியமாக ரூ.5,700-ம், சிறப்பு காலமுறை ஊதியமாக 18,000மும், அங்கன்வாடி உதவியாளர்களுக்கு தொகுப்பூதியமாக ரூ.4,100, சிறப்பு காலமுறை ஊதிய மாக ரு.12,500-ம் வழங்கப்படும். இதற்குப் பெண்கள் மட்டுமே விண்ணப்பிக்க வேண்டும். 12ம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். பொதுப் பிரிவினருக்கு வயது 25 முதல் 35 வரையும், விதவைகள், ஆதரவற்ற பெண்கள், எஸ்சி, எஸ்டி வகுப்பினர் 25 முதல் 40 வயது வரையும், மாற்றுத் திறனாளிகளுக்கு 25 முதல் 38 வயது என நிர்ணயிக்கப்பட்டுள்ளது. விண்ணப்பதாரர் குழந்தைகள் மையம் அமைந்துள்ள வார்டுப் பகுதியை சேர்ந்தவராக இருத்தல் வேண்டும். உரிய விண்ணப்பத்தைப் பூர்த்தி செய்து காலிப்பணியிட குழந்தைகள் மையம் அமைந்துள்ள குழந்தை வளர்ச்சித் திட்ட அலுவலகத்தில் (வட்டாரம், திட்டம்) வழங்க வேண்டும் இவ்வாறு அதில் அவர் தெரிவித்துள்ளார்.

Comments are closed.