தமிழகத்தில் பெண்களுக்கு எதிராக நடக்கும் பாலியல் வன்கொடுமை மற்றும் போதைப்பொருள் புழக்கத்தை கட்டுப்படுத்த தவறிய திமுக அரசை கண்டித்து தேசிய ஜனநாயக கூட்டணி கட்சியினர் இன்று( மார்ச் 17) தமிழகம் முழுவதும் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். சென்னை கே.கே.நகரில் நடைபெற்ற கண்டன ஆர்ப்பாட்டத்தில் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி கலந்துகொண்டு பேசியதாவது: “தமிழகத்தில் விலைவாசி உயர்ந்துவிட்டது. எண்ணெய், பால் விலை அதிகரித்துள்ளது. திமுக ஆட்சியில் 6 சதவீதம் சொத்து வரி உயர்த்தப்பட்டுள்ளது. மின் கட்டணம் உயர்ந்துவிட்டது. இதனை எல்லாம் கண்டுகொள்ளாத முதல்வர் மு.க. ஸ்டாலின் தினந்தோறும் போட்டோஷூட் நடத்துகிறார். டாஸ்மாக்கில் ரூ.24,000 கோடி அளவுக்கு கொள்ளை நடந்துள்ளது. சிறுமிகள், பெண்களுக்கு பாதுகாப்பு இல்லை. பாலியல் வன்கொடுமை நடக்காத நாட்களே இல்லை எனும் அளவுக்கு குற்றங்கள் நடக்கிறது. தமிழ்நாட்டில் உளவுத்துறை செயலிழந்து விட்டது. போதைப்பொருள் புழக்கம் அதிகரித்துள்ளது. பள்ளி, கல்லூரிகள் அருகே நடைபெறும் கஞ்சா விற்பனையால் மாணவர்கள் சீரழிகின்றனர். ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் உண்மையான குற்றவாளிகள் இதுவரை கைது செய்யப்படவில்லை. அனைவரையும் கடனாளி ஆக்கிவிட்டது திமுக. தமிழகத்தில் 75 நாட்களில் 246 கொலைகள் நடந்துள்ளது. தமிழகத்தில் ஒரு டிஜிபியை கூட நியமிக்க முடியாக நிலையில் திமுக அரசு உள்ளது. மக்கள் விரோத ஆட்சி அகற்றப்பட வேண்டும். குடும்ப ஆட்சிக்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும். மே மாதம் ஆட்சிக்கு வருவோம். நல்லாட்சி தருவோம். இவ்வாறு அவர் பேசினார். ஆர்ப்பாட்டத்தில் கட்சி நிர்வாகிகள், தொண்டர்கள் ஏராளமானோர் பங்கேற்று தமிழக அரசுக்கு எதிராக கண்டன கோஷங்கள் எழுப்பினர்.

Comments are closed.