சாக்லேட் பெட்டிகளில் அடைத்து திருச்சிக்கு விமானத்தில் கடத்தி வரப்பட்ட 2,447 உயிருள்ள ஆமைகள் பறிமுதல்…! ( வீடியோ இணைப்பு)
திருச்சி பன்னாட்டு விமான நிலையத்தில் இருந்து மலேசியா, சிங்கப்பூர், துபாய் உள்ளிட்ட பல்வேறு நாடுகளுக்கு விமானங்கள் இயக்கப்பட்டு வருகிறது. அதேபோல வெளிநாடுகளில் இருந்தும் திருச்சிக்கு விமானங்கள் இயக்கப்படுகின்றன. வெளிநாடுகளில் இருந்து வரும் ஒரு சில பயணிகள் தங்கம், வெளிநாட்டு கரன்சிகள் , சிகரெட் பாக்கெட்டுகள் போன்றவற்றை கடத்தி வருவதும், அவர்கள் திருச்சி விமான நிலையத்தில் சிக்குவதும் வாடிக்கையாக உள்ளது.
இந்நிலையில் மலேசிய தலைநகர் கோலாலம்பூரில் இருந்து பேட்டிக் விமானம் மூலம் திருச்சி வந்த பயணிகளை விமான நிலைய சுங்கத்துறை அதிகாரிகள் சோதனை செய்தனர். அதில், ஒரு பயணியின் உடைமைகளை சோதனை செய்தபோது, சாக்லேட் பெட்டிகளில் மறைத்து 2447 உயிருடன் உள்ள ஆமைகள் கடத்தி வரப்பட்டது தெரியவந்தது. இதனையடுத்து அந்த ஆமைகளை பறிமுதல் செய்த அதிகாரிகள் அந்த பயணியிடம் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
ஆமைகள் பிடிபட்டது குறித்து வனத்துறை அதிகாரிகளுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அந்த ஆமைகள் எதற்காக கடத்தி வரப்பட்டது?, யாரிடம் கொடுக்க அனுப்பப்பட்டது என்பது குறித்து தொடர்ந்து விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.
Comments are closed.