கிருஷ்ணகிரி மாவட்டம், தேன்கனிக்கோட்டை அருகே உள்ள அன்னியாலம் கிராம பகுதியில் காட்டு யானை ஒன்று சுற்றி வருகிறது. இதனை அறியாமல் அப்பகுதியை சேர்ந்த ஆனந்த் என்பவரது மனைவி வசந்தம்மா கூலி வேலைக்காக தோட்டம் ஒன்றின் வழியாக நடந்து சென்று கொண்டு இருந்தார். அப்போது அங்கு காட்டு யானை ஒன்று வருவதை கண்டு அதிர்ச்சி அடைந்தார். உடனடியாக அங்கிருந்து தப்பியோட முயன்றார். ஆனால், அந்த காட்டு யானை அவரை துரத்திச் சென்று தாக்கியது. இதில், வசந்தம்மா சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். சிறிது நேரத்தில் அந்த வழியாக வந்த தாசரப்பள்ளி கிராமத்தை சேர்ந்த வெங்கடேசன் என்பவரது மனைவி அஸ்வத்தம்மா வையும் அந்த காட்டு யானை தாக்கியது. இதில் அஸ்வத்தம்மாவும் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். இதனை அறிந்த அப்பகுதி மக்கள் உடனடியாக வனத்துறைக்கு தகவல் தெரிவித்தனர். அதன்பேரில், சம்பவ இடத்துக்கு வந்த போலீசார் மற்றும் வனத்துறையினர், இருவரது உடலையும் மீட்டு பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். காட்டு யானை 2 பெண்களை தாக்கி கொன்ற சம்பவம் அப்பகுதி மக்களை அச்சத்தில் உறைய வைத்துள்ளது. அன்னியாலம், தாவரக்கரை, தாசரப்பள்ளி உள்ளிட்ட கிராம பகுதிகளில் சுற்றித்திரியும் ஒற்றை காட்டு யானையை வனப்பகுதிக்குள் விரட்ட வனத்துறையினர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அப்பகுதியை சேர்ந்த பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
Comments are closed, but trackbacks and pingbacks are open.