திருச்சி மாவட்டம் துறையூர் அருகே உள்ள செல்லிபாளையம் கிராமத்தை சேர்ந்தவர் செல்லப் பாப்பு. மூதாட்டியான இவர், மேட்டுப்பாளையம் அருகே பிள்ளாபாளையம் கிராமத்தில் உள்ள பேத்தியை பார்த்துவிட்டு ஊர் செல்வதற்காக துறையூர் பேருந்து நிலையத்திற்கு வந்துள்ளார். அப்போது கழுத்தில் அணிந்திருந்த 3 1/2 பவுன் சங்கிலியை காணாமல் திடுக்கிட்டார். இது குறித்து துறையூர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். இதேபோல, துறையூர் வெங்கடேசபுரத்தை சேர்ந்த ராஜாம்பாள் என்பவர் துறையூர் வட்டாட்சியர் அலுவலகத்திற்கு வந்துவிட்டு மீண்டும் ஊர் திரும்பியபோது அவரது கழுத்தில் அணிந்திருந்த 2 பவுன் நகை காணாமல் போனது. அவரும் துறையூர் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார். இந்த 2 புகார்களின் அடிப்படையில் போலீசார் வழக்கு பதிவு செய்து இந்த சம்பவத்தில் ஈடுபட்டவர்கள் குறித்து விசாரணை நடத்தினர். இந்நிலையில் , மூதாட்டிகளிடம் கைவரிசை காட்டிய சமயபுரம் பகுதியைச் சேர்ந்த காளியம்மாள் மற்றும் கல்பனா ஆகிய 2 பெண்களை பிடித்து விசாரணை நடத்தினர். அப்போது அவர்கள் நகைகள் திருடியதை ஒப்புக்கொண்டனர். அதன்பேரில் அவர்கள் 2 பேரையும் போலீசார் கைது செய்தனர். அவர்களிடமிருந்து திருடப்பட்ட நகைகள் மீட்கப்பட்டன. பின்னர், அவர்களை கோர்ட்டில் ஆஜர் படுத்தி திருச்சி மகளிர் சிறையில் அடைத்தனர்.

Comments are closed, but trackbacks and pingbacks are open.