திருச்சியில் பாதாள சாக்கடை அடைப்பை சரி செய்தபோது விஷவாயு தாக்கி 2 துப்புரவு தொழிலாளர்கள் உயிரிழப்பு…!
திருச்சி, திருவெறும்பூர், கார்மல் கார்டன் பிரகாஷ்நகர் விஸ்தரிப்பு பகுதியில் பாதாளச் சாக்கடை அடைப்பு நீக்கும் பணியில் இன்று (22-9-2025) துப்புரவு தொழிலாளர்கள் சிலர் ஈடுபட்டு இருந்தனர். அப்போது அவர்களில் மேன்ஹோல் வழியாக உள்ளே இறங்கிய இரண்டு பேர், சாக்கடை அடைப்பை சரி செய்யும் பணியில் ஈடுபட்டுக் கொண்டிருந்தனர். அப்போது விஷவாயு தாக்கியதில் ரவி (வயது 30), பிரபு (32) ஆகிய 2 துப்புரவு தொழிலாளர்கள் மூச்சு திணறி உயிரிழந்தனர். இதுகுறித்து தகவல் அறிந்த தீயணைப்பு நிலைய வீரர்கள் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து கயிறு கட்டி பாதுகாப்புடன் குழிக்குள் இறங்கி அவர்களை மீட்டு மேலே கொண்டு வந்தனர். பின்னர் அவர்களது உடல்கள் பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டது. பாதாள சாக்கடை அடைப்பை நீக்கும் பணியில் ஈடுபட்ட 2 துப்புரவு தொழிலாளர்கள் உயிரிழந்த சம்பவம் திருச்சியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி இருக்கிறது.
Comments are closed.