கல்குவாரி உரிமையாளரிடம் ரூ.2 லட்சம் கேட்டு மிரட்டிய நாம் தமிழர் கட்சி நிர்வாகிகள் 2 பேர் கைது- மேலும் 4 பேருக்கு வலை…! (வீடியோ இணைப்பு)
திருச்சி மாவட்டம், புலிவலம் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட கரட்டாம்பட்டி கிராமத்தில் அரசுக்கு சொந்தமான இடத்தில் உள்ள கல்குவாரியினை மதுராபுரி கிராமத்தைச் சேர்ந்த தங்கவேல் என்பவர் 5 ஆண்டுகளுக்கு குத்தகைக்கு எடுத்து நடத்தி வருகிறார். இந்தநிலையில் கடந்த 03.10.24-ம் தேதி நாம் தமிழர் கட்சியைச் சேர்ந்த நிர்வாகிகள் மண்ணச்சநல்லூர் சட்டமன்றத் தொகுதி இணைச் செயலாளர் அருண்குமார்(32), மண்ணச்சநல்லூர் மேற்கு தொகுதி செயலாளர் செல்லதுரை (35) மற்றும் ராஜாங்கம் (32) ஆகியோர் சேர்ந்து தங்கவேலிடம், அரசு அனுமதி இல்லாமல் கல்குவாரி நடத்தி வருவதாகவும், இதுகுறித்து உயர் அதிகாரிகளுக்கு தெரிவிக்காமல் இருக்க தங்களுக்கு ரூ.2 லட்சம் பணம் தர வேண்டும் என கேட்டு மிரட்டி உள்ளனர். ஆனால் தங்கவேல் பணம் எதும் கொடுக்காத காரணத்தினால், அவரை தகாத வார்த்தைகளால் திட்டியும், கத்தியை காட்டி கொலை மிரட்டல் விடுத்தும் சென்றுள்ளனர். அதனைத் தொடர்ந்து கடந்த 4-ம் தேதி கல்குவாரி அலுவலகத்திற்கு சென்ற அருண்குமார். செல்லதுரை, ராஜாங்கம் மற்றும் ஒருவர், தங்கவேலிடம் மீண்டும் பணம் கேட்டுள்ளனர். பணம் தராததால், அன்றைய தினமே மேற்படி நபர்கள் யூ டியூப் சேனலில் கரட்டாம்பட்டியில் அரசு அனுமதி இல்லாமல் கல்குவாரி இயங்கி வருவதாக வீடியோ ஒன்றினை பதிவேற்றம் செய்துள்ளனர். இதுதொடர்பாக கல்குவாரியின் உரிமையாளர் தங்கவேல், புலிவலம் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். அந்த புகாரின் அடிப்படையில் நாம் தமிழர் கட்சியைச் சேர்ந்த அருண்குமார், செல்லதுரை, ராஜாங்கம் ஆகியோர் மீது குற்ற எண். Cr.No. 122/24, U/s 296(b), 351(3) BNS r/w 67 IT Act- ன் படி வழக்கு பதிவு செய்து செல்லதுரை மற்றும் .ராஜாங்கம் ஆகியோரை இன்று (14.10.2024)-ஆம் தேதி கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தினர். மேலும் வழக்கில் தொடர்புடைய அருண்குமார், ஆனந்தன், தனபால், வினோத் ஆகியோரை வலைவீசி தேடி வருகின்றனர்.
Comments are closed.