திருச்சி மற்றும் துறையூரில் லஞ்சம் வாங்கிய 2 நில அளவையர்கள் கைது: ‘பொறி’ வைத்துப் பிடித்த லஞ்ச ஒழிப்பு போலீசார்…!
திருச்சி, ஏர்போர்ட் அருகே வசித்து வரும் ராபியத்துல் பஷிரியா என்பவர் கொட்டப்பட்டு பகுதியில் நிலத்தை வாங்கி அதை சாத்தூர் பத்திரப்பதிவு அலுவலகத்தில் பதிவு செய்துள்ளார். அந்த நிலத்திற்கு தனி பட்டா கேட்டு திருச்சி கிழக்கு வட்டாட்சியர் அலுவலகத்தில் உள்ள நில அளவையர் தையல் நாயகியை அணுகியுள்ளார்.
அப்போது தையல்நாயகி நிலத்தை அளக்க ரூ.13 ஆயிரம் லஞ்சமாக கேட்டுள்ளார். லஞ்சம் கொடுக்க விரும்பாத ராபியத்துல் பஷிரியா இது குறித்து திருச்சி லஞ்ச ஒழிப்புத்துறை போலீசில் புகார் அளித்தார். லஞ்ச ஒழிப்பு போலீசார் ஆலோசனையின் பேரில் லஞ்சப் பணத்தை இன்று (ஜூலை 11) தையல்நாயகியிடம் ராபியத்துல் பஷிரியா கொடுத்த போது அங்கு மறைந்திருந்த லஞ்ச ஒழிப்பு போலீசார் அவரை கையும், களவுமாக பிடித்து கைது செய்தனர். இதேபோல திருச்சி மாவட்டம், துறையூர் பகுதியில் முருகேசன் என்பவருக்கு சொந்தமான நிலத்தை அளக்க நில அளவையர் ராஜா என்பவர் ரூ.5000 லஞ்சம் வாங்கிய போது அவரையும் லஞ்ச ஒழிப்பு போலீசார் கைது செய்தனர். அவர்கள் இதுபோன்று வேறு யாரிடமாவது லஞ்சம் வாங்கி இருக்கிறார்களா? என்று விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. திருச்சி மாவட்டத்தில் லஞ்சம் வாங்கியதாக 2 நில அளவையர்கள் கைது செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.
Comments are closed.