திருச்சி மாவட்டத்தில் பிரசித்தி பெற்ற வழிபாட்டு தலங்களான சமயபுரம் மாரியம்மன் கோவில் மற்றும் ஸ்ரீரங்கம் அரங்கநாதசுவாமி கோவில் ஆகியவற்றின் சித்திரை தேர் திருவிழாக்களை முன்னிட்டு திருச்சி மாவட்ட நிர்வாகம் சார்பில், நாளை ஏப்ரல் 18ம் தேதி செவ்வாய்க்கிழமை மற்றும் நாளை மறுநாளான ஏப்ரல் 19ம் தேதி புதன்கிழமை ஆகிய 2 நாட்கள் உள்ளூர் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. திருச்சி சமயபுரம் அருள்மிகு மாரியம்மன் திருக்கோயில் சித்திரைத்தேர் திருவிழாவை முன்னிட்டு, நாளை 18.04.2023 அன்று உள்ளூர் விடுமுறை விடப்படுகிறது. இவ்விடுமுறையினை ஈடு செய்யும் பொருட்டு வருகிற 29.04.2023 சனிக்கிழமையன்று பணி நாளாக செயல்படும். இதே போன்று ஸ்ரீரங்கம் அருள்மிகு அரங்கநாதசுவாமி திருக்கோயில் சித்திரைத்தேர்த் திருவிழாவினை முன்னிட்டு நாளை மறுநாள் 19.04.2023 புதன்கிழமையன்று உள்ளுர் விடுமுறையாக அறிவிக்கப்படுகிறது. இந்த விடுமுறைக்குப் பதிலாக வருகின்ற 13.05.2023 சனிக்கிழமை வேலைநாளாக அறிவிக்கப்படுகிறது. இந்த இரண்டு நாள் விடுமுறைகளும் அனைத்து தரப்பு மக்களையும் மகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. குறிப்பாக பள்ளி மாணவ மாணவிகள் குதூகலம் அடைந்துள்ளனர். இந்நிலையில் 6, 7, 8 ,9 ஆகிய வகுப்பு மாணவர்களுக்கு தேர்வுகள் வரும் 21ஆம் தேதி தொடங்கி 28ம் தேதி வரை நடக்கிறது. அதற்கான உத்தரவு பள்ளிக்கல்வித்துறை மூலம் அந்தந்த பள்ளிகளுக்கு அனுப்பப்பட்டுள்ளது என்று மாவட்ட ஆட்சியா் மா.பிரதீப்குமார் அறிவித்துள்ளார்.
