Rock Fort Times
Online News

3,665 காவலர் பணியிடங்களுக்கு 2.25 லட்சம் பேர் போட்டி… நாளை (நவ. 9) எழுத்து தேர்வு எழுதுபவர்களுக்கு புதிய நடைமுறை அமல்!

தமிழ்நாடு சீருடைப் பணியாளர் தேர்வு வாரியம், கடந்த ஆகஸ்ட் மாதம் காவல் துறை, சிறைத்துறை மற்றும் தீயணைப்புத் துறைகளில் காலியாக உள்ள 3,665 இரண்டாம் நிலைக் காவலர் பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பை வெளியிட்டது. இதில், காவல் துறையில் 2,833, சிறைத் துறையில் 180, தீயணைப்புத் துறையில் 631 தீயணைப்பாளர்கள் மற்றும் பழங்குடியினருக்கான சிறப்பு பணியிடங்கள் 21 ஆகியவை அடங்கும். இந்த காலிப் பணியிடங்களுக்காக மாநிலம் முழுவதும் சுமார் 2.25 லட்சம் பேர் விண்ணப்பித்திருந்த நிலையில், அவர்களுக்கான எழுத்துத் தேர்வு நாளை(09-11-2025) நடைபெற உள்ளது. மாநிலம் முழுவதும் 45 மையங்களில் பலத்த பாதுகாப்புடன் நடைபெறும் இத்தேர்வில் முறைகேடுகளைத் தடுக்கும் விதமாக முதல்முறையாக விண்ணப்பதாரர்களின் இடது கை பெருவிரல் ரேகை பதிவு சரிபார்க்கும் முறை அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. தேர்வு மையங்களுக்கு வரும் விண்ணப்பதாரர்கள் காலை 8 மணி முதல் 9.30 மணிக்குள் மட்டுமே அனுமதிக்கப்படுவார்கள். தேர்வு அறைக்குள் கைப்பேசி, ஸ்மார்ட் வாட்ச் உள்ளிட்ட எந்தவொரு மின்னணு சாதனங்களையும் கொண்டுவரக் கூடாது எனத் திட்டவட்டமாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், ‘தேர்வுக்கு வருபவர்கள் நுழைவுச் சீட்டுடன், ஆதார் அட்டை, வாக்காளர் அட்டை அல்லது ஓட்டுநர் உரிமம் இவற்றில் ஏதேனும் ஒன்றின் அசலைக் கட்டாயம் உடன் வைத்திருக்க வேண்டும்’ என சீருடைப் பணியாளர் தேர்வு வாரியம் திட்டவட்டமாக அறிவுறுத்தியுள்ளது. இந்த எழுத்துத் தேர்வில் தேர்ச்சி பெறுபவர்கள் மட்டுமே அடுத்தகட்டமான உடல் தகுதித் தேர்வுக்கு அழைக்கப்படுவார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

Comments are closed.

Rockfort Times செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள வேண்டுமா? இல்லை ஆம்