Rock Fort Times
Online News

கடந்த சட்டசபை தேர்தலின்போது ரூ.1 கோடி சிக்கிய வழக்கில் 16 பேர் விடுதலை…

கடந்த 2021ம் ஆண்டு சட்டப்பேரவைத் தேர்தல் நேரத்தில் 23.3.2021ம் தேதி இரவு திருச்சி மாவட்ட அதிமுக மீனவர் அணி செயலாளரான கண்ணதாசன் வீட்டிலிருந்து ரூ.3 கோடி ரொக்கம் தலா ரூ.1 கோடி கொண்ட மூட்டைகளாக கட்டப்பட்டு காரில் கொண்டு செல்லப்பட்டதாகவும், அதை மற்றொரு கும்பலைச் சேர்ந்தவர்கள் தா. பேட்டை பகுதியில் வைத்து வழிப்பறி செய்ததாகவும் திருச்சி மாவட்ட தேர்தல் பறக்கும்படை அதிகாரிகளுக்கு தகவல் கிடைத்தது. இதனையடுத்து பறக்கும் படையினர் தா.பேட்டை விரைந்து அங்கு காருடன் நின்றிருந்த அதிமுக அப்போதைய நிர்வாகிகள் கூட்டுறவு தொடக்க வேளாண் சங்க நிர்வாகி ஜெயசீலன், முசிறி சட்டப்பேரவைத் தொகுதி செயலாளர் ரவிச்சந்திரன், கவுன்சிலர் சத்தியராஜா, கார் ஓட்டுநர் சிவக்குமார் ஆகியோரிடம் விசாரணை மேற்கொண்டனர். மேலும், முள் புதருக்குள் கிடந்த ரூ.1 கோடி பறிமுதல் செய்யப்பட்டது. இது தொடர்பாக பறக்கும் படை அதிகாரி (அப்போதைய வருமான வரித்துறை துணை இயக்குநர்) மதன்குமார் அளித்த புகாரின்பேரில் தா. பேட்டை போலீசார் வழக்குப் பதிந்து விசாரணை மேற்கொண்டனர். விசாரணையில், அதிமுக முசிறி முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் செல்வராஜ் மகன் ரவிச்சந்திரனுடைய காரில் மீனவ அணிச்செயலாளர் கண்ணதாசன், அவரது சகோதரர்கள் மற்றும் நண்பர்கள் மூலமாக ரூ. 3 கோடி கொடுத்து அனுப்பியது தெரியவந்தது. அந்த காரை மண்ணச்சல்லூரைச் சேர்ந்த ரவுடி சாமி ரவி என்கிற ரவிக்குமார் தலைமையில் அவரது சகாக்கள் சதிஸ்குமார், குணசேகரன் (எ) சிவா, திலிப்குமார், ராஜ்குமார், பிரகாஷ், சுரேஷ்குமார் (எ) சுரேஷ், மணிண்டன், ராஜேந்திரன் (எ) ராஜா மற்றும் நாகராஜன் (எ) நாகராஜ் உள்ளிட்ட 10 பேர் 2 கார்களில் பின் தொடர்ந்துள்ளனர். பணத்துடன் சென்ற கார்,  தா. பேட்டை காவல் நிலைய எல்லைக்கு உள்பட்ட ஜீயபுரம் அருகே சென்றபோது, 10 பேர் கொண்ட கும்பல் பணத்துடன் சென்ற காரை வழிமறித்து காரிலிருந்தவர்களை தாக்கி, அவர்களிடமிருந்த பணத்தை பறித்துள்ளனர். இந்தநிலையில் 3 கோடியுடன் காரில் வந்தவர்கள் 1 கோடி கொண்ட ஒரு மூட்டையை அருகிலிருந்த புதர் பகுதியில் வீசியுள்ளனர். அந்த விவரம் தெரியாமல் காரில் வந்தவர்கள் ரூ.2 கோடியுடன் தப்பி சென்று விட்டனர் என விசாரணையில் தெரியவந்துள்ளது. இதனையடுத்து பணம் பறித்துச்சென்றதாக கூறப்பட்ட சாமி ரவி உள்ளிட்ட 10 பேரை போலீசார் கைது செய்து அவர்களிடமிருந்த ரூ. 2 கோடியை பறிமுதல் செய்தனர். மேலும், பணம் கொண்டு சென்ற 6 பேரையும் கைது செய்து விசாரணை மேற்கொண்டனர். இதுதொடர்பான வழக்கு திருச்சி மாவட்ட முதலாவது அமர்வு நீதிமன்றத்தில் நடந்து வந்தது.

இந்த வழக்கில் நேற்று ( 27.10.2023 )  தீர்ப்பளிக்கப்பட்டது. பணம் கொண்டு சென்றதாக கூறப்பட்ட ஜெயசீலன், ரவிச்சந்திரன் தரப்பிலான 6 பேரும், தாங்கள் காரில் எந்த பணமும் கொண்டு செல்லவில்லை, பறக்கும் படையினர் பறிமுதல் செய்த ரொக்கம் குறித்து எங்களுக்கு எதுவும் தெரியாது என கூறினர். அவற்றை போலீசாரால் உறுதிப்படுத்த முடியவில்லை. இதனையடுத்து அவர்கள் 6 பேர் மற்றும் பணம் பறித்ததாக புகார் கூறப்பட்ட சாமி ரவி தலைமையிலான 10 பேர் உள்பட 16 பேரையும் நீதிபதி விடுதலை செய்து உத்தரவிட்டார். மேலும், பறிமுதல் செய்யப்பட்ட ரொக்கத்தை அரசுடமையாக்குமாறு நீதிபதி செல்வமுத்துக்குமாரி உத்தரவிட்டார். இந்த வழக்கில் அரசுத்தரப்பு வழக்குரைஞராக சக்திவேல் ஆஜரானார்.சம்பவ இடத்தில் பறிமுதல் செய்யப்பட்ட ரூ. 1 கோடிக்கு உரிய முகாந்திரம் இல்லாததால், பறித்ததாக கூறப்பட்ட ரூ. 2 கோடி குறித்து எவ்வித ஆதாரமும் இல்லாமல் போனது. பணம் கொண்டு வந்ததாக புகார் கூறப்பட்டவர்கள் பணமே கொண்டு வரவில்லை எனக் கூறிவிட்டதால் வழக்கில் யாரையும் குற்றம்சாட்ட முடியவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

Comments are closed, but trackbacks and pingbacks are open.

Rockfort Times செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள வேண்டுமா? இல்லை ஆம்