விநாயகரை வழிபட்டு எந்த ஒரு காரியத்தை தொடங்கினாலும் அந்த காரியம் சிறப்பாக அமையும் என்பது இந்துக்களின் நம்பிக்கையாகும். இதனால் தான் விநாயகரை முழு முதற்கடவுளாக வழிபட்டு வருகின்றனர். ஆண்டுதோறும் விநாயகருக்கு நடத்தப்படும் விநாயகர் சதுர்த்தி விழா மிகவும் சிறப்பு வாய்ந்ததாகும். இந்நாளில் விநாயகர் சிலைகளை வீட்டிலும், முக்கிய தெரு சந்திப்புகளிலும் வைத்து வணங்கப்படுகிறது. இந்த ஆண்டு பஞ்சாங்கப்படி புரட்டாசி முதல் நாளான இன்று ( 18.09.2023 ) விநாயகர் சதுர்த்தி விழா கொண்டாடப்படுகிறது. இதனையொட்டி
திருச்சியில் பிரசித்திபெற்ற மலைக்கோட்டை உச்சிப் பிள்ளையார் கோவிலில் விநாயகர் சதுர்த்தி விழா வெகு விமரிசையாக கொண்டாடப்பட்டு வருகிறது. இன்று
அதிகாலை 5 மணிக்கு கோவில் நடை திறக்கப்பட்டு விநாயகருக்கு சிறப்பு பூஜை நடைபெற்றது.
தொடர்ந்து மலைக்கோட்டை அடிவாரத்தில் உள்ள மாணிக்க விநாயகர் மற்றும் உச்சிப்பிள்ளையாருக்கு 50 கிலோ பச்சரிசி, 50 கிலோ உருண்டை வெல்லம், 2 கிலோ எள், 1 கிலோ ஏலக்காய் மற்றும் சாதிக்காய், 6 கிலோ நெய், 100 தேங்காய் உள்ளிட்டவைகளைக் கொண்டு தலா 75 கிலோ எடையில் 150 கிலோ எடையுள்ள இரண்டு கொழுக்கட்டை தயார் செய்யப்பட்டு மேளதாளங்கள் முழங்க தொட்டிலில் வைத்து உச்சிக்கு கொண்டு செல்லப்பட்டு சிவாச்சாரியார்கள் மற்றும் கோவில் நிர்வாகிகள் விநாயகருக்கு நெய்வேத்தியம் செய்தனர். பின்னர், அந்த கொழுக்கட்டை பிரசாதமாக பக்தர்களுக்கு வழங்கப்பட்டது.

இங்கு தமிழகம் முழுவதுமிருந்து ஏராளமான பக்தர்கள் வருகை தந்து விநாயகரை வழிபட்டனர். இதே போல திருச்சியில் உள்ள விநாயகா் கோவில்களிலும் , வீடுகளிலும், காவல் துறையினர் அனுமதிக்கப்பட்ட இடங்களிலும் விநாயகர் சிலைகள் பிரதிஷ்டை செய்யப்பட்டு பூஜைகள் நடைபெற்றன. பூஜைகள் செய்யப்பட்ட விநாயகர் சிலைகள் மூன்றாம் நாள் நீர் நிலைகளில் கரைக்கப்படுகின்றன.

Comments are closed, but trackbacks and pingbacks are open.