“நீட்” தேர்வை ரத்து செய்யக்கோரி திருச்சியில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட இந்திய மாணவர் சங்கத்தினர்- போலீசாரிடையே தள்ளுமுள்ளு… !
” நீட்” தேர்வை ரத்து செய்யக்கோரி இந்திய மாணவர் சங்கத்தினர் திருச்சி தலைமை தபால் நிலையம் முன்பு இன்று(11-06-2024) ஆர்ப்பாட்டம் நடத்தினர். ஆர்ப்பாட்டத்திற்கு மாவட்ட தலைவர் சூர்யா தலைமை வகித்தார். நிர்வாகிகள் வைரவளவன், ஆமோஸ் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
நீட் தேர்வு குளறுபடிகளை சுட்டிக்காட்டியும், நீட் தேர்வை ரத்து செய்ய வலியுறுத்தியும் மாணவர் சங்கத்தினர் கோஷம் எழுப்பி ஆர்ப்பாட்டம் நடத்திக் கொண்டிருந்தனர். போலீஸார் அவர்களை கைது செய்ய முயன்ற போது, மாணவர் சங்கத்தினர் போலீசார் அட்டைக்கு தள்ளுமுள்ளு ஏற்பட்டது. சூர்யா மற்றும் சிலர் தபால் நிலையம் முன்பு அமைத்திருந்த தடுப்புகளை தாண்டி குதித்து தபால் அலுவலகம் உள்ளே நுழைய முயன்றனர். அப்போது பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த மாநகர குற்றப்பிரிவு காவல் உதவி ஆணையர் முருகவேல் தலைமையிலான போலீஸார் தடுப்புகளை தாண்ட முயன்ற மாணவர்களை இழுத்தனர். இதில் நிலை தடுமாறி விழுந்த மாணவர்கள் மீது போலீஸாரும் கீழே விழுந்தனர்.

ஒரு மாணவர் தடுப்புகளை தாண்டி தபால் அலுவலக நுழைவாயில் கதவு மீது ஏற முயன்றார். அவரை போலீஸார் குண்டுகட்டாக தூக்கி அப்புறப்படுத்தினர். ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டதாக 4 மாணவிகள் உட்பட 11 பேரை போலீசார் கைது செய்து வேனில் ஏற்றி சென்றனர். இந்த ஆர்ப்பாட்டத்தால் அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.

Comments are closed.