இந்து சமய அறநிலையத்துறை அறிவிப்பின்படி பிரசித்தி பெற்ற அம்மன் கோவில்களில் மாதந்தோறும் பௌர்ணமி அன்று திருவிளக்கு பூஜை நடைபெற்று வருகிறது. அந்தவகையில் ஐப்பசி மாதம் பௌர்ணமி தினமான நேற்று சக்தி ஸ்தலங்களில் பிரசித்தி பெற்ற சமயபுரம் மாரியம்மன் கோவிலில் அதிகாலை நடை திறக்கப்பட்டு மூலவர் மற்றும் உற்சவர் மாரியம்மனுக்கு சிறப்பு அபிஷேக ஆராதனை நடைபெற்றது. இதில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு அம்மனை தரிசனம் செய்தனர். இதனைத்தொடர்ந்து பெண்களுக்கு நுழைவுச்சீட்டு வழங்கப்பட்டு 108 பெண்கள் திருவிளக்கு ஏற்றி உற்சவர் மாரியம்மன் முன்பு பூஜை செய்தனர். அப்போது உற்சவர் மாரியம்மன் சிறப்பு அலங்காரத்தில் பக்தர்களுக்கு காட்சியளித்தார். இந்து சமய அறநிலைத்துறை சார்பில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த இந்த திருவிளக்கு பூஜையில் திருச்சி மாவட்டம் மட்டும்மல்லாது வெளி மாவட்டங்களை சேர்ந்த பக்தர்கள் ஏராளமானோர் கலந்து கொண்டு அம்மனை வழிபட்டு சென்றனர். முன்னதாக அறங்காவல் குழு தலைவர் இளங்கோவன், கோயில் இணை ஆணையர் பிரகாஷ், அறங்காவல் குழு உறுப்பினர்கள் சுகந்தி, பிச்சைமணி, லட்சுமணன், உதயம் ரவி ஆகியோர் கோயில் குத்து விளக்கை ஏற்றி 108 திருவிளக்கு பூஜையை துவக்கி வைத்தனர். இதற்கான ஏற்பாடுகளை கோவில் பணியாளர்கள் மற்றும் குருக்கள் செய்து இருந்தனர்.
Comments are closed.