போலந்து நாட்டு வேலைக்கு அனுப்புவதாக 4 பேரிடம் ரூ. 10 லட்சம் மோசடி – பெண் உள்பட இரண்டு பேர் மீது வழக்கு!
திருச்சி ஸ்ரீரங்கம் காந்தி ரோடு பகுதியில் வெளிநாடுகளுக்கு ஆட்களை அனுப்பும் ஒரு தனியார் ஏஜென்சி செயல்பட்டு வருகிறது. இதன் உரிமையாளராக மீனாட்சி என்பவர் உள்ளார். மேலாளராக பாலகிருஷ்ணன் என்பவர் பணியாற்றி வந்தார். இவர்கள் இருவரும் சிவகங்கை மாவட்டம் கட்டாணிப்பட்டி பெரியகோட்டைப்பட்டி பகுதியைச் சேர்ந்த பார்த்தசாரதி (வயது 39) மற்றும் அவரது உறவினர்கள் ஆதித்யன், அகஸ்டின், ஜெயக்குமார், முத்து ராமலிங்கம் ஆகிய நான்கு பேரிடம் போலந்து நாட்டுக்கு வேலைக்கு அனுப்பி வைப்பதாக கூறி மொத்தம் ரூ. 9 லட்சத்து 62 ஆயிரம் பெற்று மோசடி செய்ததாக கூறப்படுகிறது. இதுகுறித்து பார்த்தசாரதி கொடுத்த புகாரின் பேரில் மீனாட்சி, மேலாளர் பாலகிருஷ்ணன் ஆகிய இருவர் மீதும் ஸ்ரீரங்கம் போலீசார் மோசடி உள்ளிட்ட 4 பிரிவுகளில் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.