ஆபரணங்கள் அழகுக்கு மட்டுமல்ல. அதீத சக்திக்கும் பொறுப்பானவை. எந்த உலோகத்தால் ஆன ஆபரணத்தை உடலின் எந்த பாகத்தில் அணிந்தால் என்ன பலன் என்று நம் முன்னோர்கள் சொல்லி வைத்துள்ளார்கள். எந்த காரியத்தையும் காரணமின்றி செய்யாதே என்பது நம் இந்து தர்மம்.
பெரியோர்களின் விளக்கம் ஒவ்வொன்றுக்கும் ஒரு காரணம் இருக்கும். தங்கம் என்றால் புனிதமானது, நெருப்புக்கு சமமானது என்கிறது சாஸ்திரம். தங்கம் ஆகர்ஷிக்கும் சக்தி கொண்டது. அதனால்தான் சுவாமிக்கு தங்க ஆபரணங்கள், கவசங்களை சாற்றுகிறோம். அங்கிருந்து வெளியாகும் அதீத சக்திகளை பெற்றுக் கொள்கிறோம். மனிதர்களை பொறுத்தவரை இடுப்புக்கு கீழே தங்கம் அணிவது நம் வழக்கம் அல்ல. ரத்த ஓட்டம். நரம்புகளின் துடிப்பு போன்ற பல உயிரியல் காரணங்களால் இடுப்புக்கு கீழே தங்கம் அணிவது நம் முன்னோர்களால் தடை செய்யப்பட்டுள்ளது. எனவே கொலுசு, மெட்டி போன்றவற்றை தங்கத்தில் அணியாமல் இருப்பதே நலம்.