Rock Fort Times
Online News

திருச்சியில் பிப். 21-ந் தேதி நாதக மாநாடு: 234 வேட்பாளர்களையும் ஒரே மேடையில் அறிமுகம் செய்கிறார் சீமான்…!

இயக்குனரும், நடிகருமான சீமான்,கடந்த 2010-ம் ஆண்டு மே மாதம் 18-ந் தேதி நாம் தமிழர் கட்சியை தொடங்கினார். 2016-ம் ஆண்டு முதல் தேர்தலை சந்தித்து வரும் இந்தக் கட்சி, அனைத்து தேர்தல்களிலும் தனித்தே போட்டியிட்டு வருகிறது. 2016-ம் ஆண்டு சட்டசபை தேர்தலில் 1.07 சதவீத வாக்குகளை பெற்ற நாம் தமிழர் கட்சி, 2019-ம் ஆண்டு நாடாளுமன்ற தேர்தலில் 3.9 சதவீத வாக்குகளை பெற்றது. தொடர்ந்து நடந்த 2021-ம் ஆண்டு சட்டசபை தேர்தலில் 6.58 ஆக உயர்ந்த அக்கட்சியின் வாக்கு சதவீதம், 2024-ம் ஆண்டு நாடாளுமன்ற தேர்தலில் 8.2 ஆக அதிகரித்தது.தேர்தலில் ஒரு அரசியல் கட்சி 8 சதவீதத்திற்கும் மேல் வாக்குகளை பெற்றால் மாநில கட்சியாக இந்திய தேர்தல் ஆணையம் அங்கீகரிக்கும் நடைமுறை உள்ளது. அந்தவகையில், கட்சி தொடங்கிய 15 ஆண்டுகளில், அதாவது கடந்த ஆண்டு (2025) ஜனவரி 10-ந் தேதி நாம் தமிழர் கட்சிக்கு மாநில அந்தஸ்து கிடைத்தது.இந்த நிலையில், வருகிற சட்டசபை தேர்தலையும் நாம் தமிழர் கட்சி தனித்தே எதிர்கொள்ள இருக்கிறது என்று அக்கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் ஏற்கனவே அறிவித்துவிட்டார்.ஒரு சில கட்சிகள் நாம் தமிழர் கட்சியை கூட்டணிக்கு இழுக்க முயற்சி மேற்கொண்டாலும், அது நடக்கவில்லை. இந்த நிலையில், திருச்சியில் இம்மாதம் 21-ந் தேதி (சனிக்கிழமை) நாம் தமிழர் கட்சி சார்பில் “மாற்றத்தை விரும்பும் மக்களின் மாநாடு – 2026” நடைபெற இருக்கிறது. இந்த மாநாட்டில், தமிழகத்தில் 234 தொகுதிகளிலும் களம் காணப்போகும் நாம் தமிழர் கட்சி வேட்பாளர்கள் அறிவிக்கப்பட இருக்கின்றனர்.

Comments are closed.

Rockfort Times செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள வேண்டுமா? இல்லை ஆம்