தலைநகர் டெல்லியில் துணிகர சம்பவம்: தமிழகத்தைச் சேர்ந்த காங்கிரஸ் பெண் எம்பியிடம் 4.5 பவுன் சங்கிலி பறிப்பு…!
காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த மயிலாடுதுறை எம்.பி. சுதா நாடாளுமன்ற மழைக்கால கூட்டத் தொடரில் பங்கேற்பதற்காக டெல்லியில் உள்ளார். அவர் இன்று (ஆகஸ்ட் 4) நாடாளுமன்ற குடியிருப்பு அருகே நடைபயிற்சியில் ஈடுபட்டார். அப்போது அப்பகுதி வழியாக இருசக்கர வாகனத்தில் வந்த மர்ம நபர், சுதா அணிந்திருந்த தங்க சங்கிலியை பறிக்கும் முயற்சியில் ஈடுபட்டார். இதைக்கண்டு அதிர்ச்சியடைந்த அவர், மர்ம நபரிடம் இருந்து செயினை காத்துக்கொள்ள போராடியும் முடியவில்லை. அந்த மர்ம நபர் சுதாவை தாக்கிவிட்டு அவர் அணிந்திருந்த 4.5 சவரன் சங்கிலியை பறித்துக்கொண்டு தப்பி ஓடிவிட்டார். இதில் சுதாவுக்கு லேசான காயம் ஏற்பட்டது. இதுதொடர்பாக சாணக்யபுரி காவல் நிலையத்தில் அவர் கொடுத்த புகாரின் அடிப்படையில் வழக்குப்பதிவு செய்த போலீசார், செயின் பறிப்பில் ஈடுபட்ட மர்ம நபரை வலைவீசி தேடி வருகின்றனர். நாடாளுமன்ற உறுப்பினரிடமே மர்ம நபர்கள் கைவரிசை காட்டிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது.
Comments are closed.