நம்முடைய செயல்கள் அனைத்தும் கடவுளால் கண்காணிக்கப்பட்டு, புண்ணிய பாவங்கள் நிர்ணயிக்கப்படும். அதன் அடிப்படையில்தான் நம் பிறப்பும் நிச்சயிக்கப்படுகிறது. தவறு செய்யும் ஒருவர் சமுதாயத்தில் உயர்ந்த நிலையிலும் நல்ல நிலையிலும் இருக்கிறார் என்பதை ஒப்புக்கொள்ள முடியாது. வெளித்தோற்றத்துக்கு வேண்டுமானால் அப்படி தோன்றலாம்.
ஆனால், தெய்வத்தின் தண்டனையிலிருந்து எவரும் தப்பிக்க முடியாது. நம் சனாதன தர்மம்படி ஓர் உயிரானது முக்திபேறு அடையும்வரை பலபிறவிகள் எடுக்கும் என்பார்கள். இதன் அடிப்படையில் பார்த்தால் நாம் இந்த பிறவியில் அனுபவித்து வரும் இன்பமோ அல்லது துன்பமோ அது இந்த பிறவியை மட்டுமே சார்ந்தது அல்ல என்பதை அறியலாம். அவை பல பிறவிகளின் தொடர்ச்சியே என்பதை புரிந்து கொள்ளலாம். ஆக இந்த பிறவியில் தொடர்ந்து தவறுகளை செய்து வரும் ஒருவர், நற்பலன்களை அனுபவிக்கிறார் எனில் முன்னர் பலபிறவியில் அவர் செய்த நல்வினைகளின் பயனே அதற்கு காரணமாகும். ஆனால், புண்ணிய பலன்கள் முடிந்துவிட்டால் நற்பலன்களை அனுபவிக்க முடியாது. இதுவே பொதுநீதி தெய்வகுற்றம் என்பது கண்டிப்பாகஅதற்குரிய பலனை கொடுக்கவே செய்யும் இந்த பிறவியிலோ அல்லது அடுத்தடுத்த பிறவிகளிலோ செய்த விலைக்கு ஏற்ப தண்டனையை பெற்றே தீர்வார்கள். அரசன் அன்று கொள்வான், தெய்வம் நின்றுகொல்லும் என்பது நம்முன்னோர் கூறிய
சத்தியவாக்கு.