தீர்த்தத்தை வரித்தல் என்பதே தீர்த்தவாரி. அதாவது தீர்த்தம் எனும் புனித நீரை பக்தர்களுக்கு உரிமையாக்கும் புனித வைபமே தீர்த்தவாரி. ஆலயங்களுக்கு சென்று மூலவரை தரிசிக்க இயலாதநிலையில் இருப்பவர்களுக்கும் அருள் செய்ய, உற்சவமூர்த்தியாய் தெய்வங்கள் பக்தர்களை தேடி வருவர். அதுபோல் இந்த புண்ணிய பூமியில் உள்ள சகல புனித தீர்த்தங்களையும் ஒரே இடத்தில் மானசீகமாக வரவழைத்து இறைவன் அருள் செய்யும் அற்புத வைபவமே தீர்த்தவாரி என்பார்கள் பெரியோர்கள். கோவில் திருவிழாக்களின் நிறைவு நிகழ்வாக தீர்த்தவாரி நடைபெறுவது வழக்கம். இந்த வைபவத்தின்போது சுவாமி நீராடிய தீர்த்தத்தில், தீர்த்தமாடி வழிபட்டால்தான் விழாவில் கலந்துகொண்ட பலன் பூரணமாக கிடைக்கும் என்கின்றன புராண நூல்கள். பிரமோற்சவம், சூரிய, சந்திர கிரகணங்கள், மாசிமகம், பங்குனி உத்திரம், சித்ரா பௌர்ணமி, மஹாளய அமாவாசை போன்ற விசேஷங்களின்போது தீர்த்தவாரி நிகழும். ஆடியில் அம்பிகைக்கும், தை, மாசி, பங்குனி, மாதங்களில் ஈசனுக்கும் பல ஆலயங்களில் தீர்த்தவாரி நடைபெறுவது வழக்கம். திருவண்ணாமலையில் ஆண்டுக்கு 7 முறை தீர்த்தவாரி நடைபெறுவது சிறப்பு அம்சமாகும்.