திருச்சி, பஞ்சப்பூரில் கட்டப்பட்டு வரும் புதிய மார்க்கெட்டில் காந்தி மார்க்கெட் சிறு மொத்த வியாபாரிகளுக்கும் கடைகள் ஒதுக்கி தர வேண்டும்… மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் காந்தி மார்க்கெட் வியாபாரிகள் முன்னேற்ற சங்க நிர்வாகிகள் மனு !
திருச்சி, காந்தி மார்க்கெட் வியாபாரிகள் முன்னேற்ற சங்க தலைவர் எம்.கே.கமலக்கண்ணன், செயலாளர் ஜெ.மூர்த்தி, கூடுதல் செயலாளர் மந்தை எஸ்.ஜெகன், துணைத் தலைவர் பூண்டு பாலு மற்றும் நிர்வாகிகள் இன்று(17-11-2025) திருச்சி மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் ஒரு கோரிக்கை மனு கொடுத்தனர். அதில் கூறப்பட்டு இருப்பதாவது:-
திருச்சி, பஞ்சப்பூர் ஒருங்கிணைந்த பேருந்து நிலையத்திற்கு எதிரே பெரியார் ஒருங்கிணைந்த காய்கனி அங்காடி சுமார் 22 ஏக்கரில் கட்டுமான பணி நடந்து வருகிறது. இங்கு சுமார் 872 கடைகள், 149 தானிய கடைகள் மற்றும் ஒரு ஏக்கரில் வாழைக்காய் மண்டி, 850 திறந்தவெளி சில்லறை வணிக தரைக் கடைகள் அமைய உள்ளதாக அறிகிறோம். காந்தி மார்க்கெட் வியாபாரிகள் முன்னேற்ற சங்கத்தில் உள்ள உறுப்பினர்கள் தற்போது காந்தி மார்க்கெட்டில் தரைக் கடைகள், உள் வாடகை கடைகள் என கடை வைத்து வியாபாரம் செய்து வருவதோடு மாநகராட்சிக்கு தினசரி வாடகை செலுத்தி வருகின்றனர். இரவு நேரத்தில் சிறு மொத்த காய்கறி வியாபாரமும் செய்கின்றோம். இதில் மளிகை மற்றும் ஷாப் கடைகளும் அடங்கும். அந்த வகையில் காந்தி மார்க்கெட்டில் சிறு மொத்த சில்லறை வியாபார கடைகள் சுமார் 2000 உள்ளன. புதிய மார்க்கெட் அமையும் போது இவர்களின் வாழ்வாதாரம் பாதிக்காத வகையில் கடைகள் ஒதுக்க வேண்டும். அந்த கடைகளின் அளவு 100 முதல் 200 சதுர அடிகள் கொண்டவைகளாக அமைக்க வேண்டும். அந்தக் கடைகளை கோயம்பேடு மார்க்கெட் போல வியாபாரிகளுக்கு கிரையம் செய்து கொடுக்க வேண்டும். எக்காரணம் கொண்டும் டெண்டர் முறையில் கடைகளை ஏலம் விடக்கூடாது.

காந்தி மார்க்கெட் வியாபாரிகளை தவிர வெளி நபர்களுக்கு கடைகள் ஒதுக்க கூடாது. காந்தி மார்க்கெட்டில் மாநகராட்சி மூலம் சிறு மொத்த வியாபார கடைகளை கணக்கெடுக்கும் போது எங்களது சங்க நிர்வாகிகளையும் அழைத்துச் செல்ல வேண்டும். இதுதொடர்பாக மாவட்ட ஆட்சித் தலைவர் எங்களையும் அழைத்து ஆலோசனைக் கூட்டம் நடத்த வேண்டும். இந்த மனுவை சாதாரண மனுவாக எண்ணாமல் 2000 குடும்பங்களின் வாழ்வாதாரமாக எண்ணி நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அந்த மனுவில் கூறப்பட்டு இருந்தது. மனுவைப் பெற்றுக் கொண்ட அதிகாரிகள், இதுதொடர்பாக கலெக்டரின் பார்வைக்கு கொண்டு சென்று நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்தனர்.

Comments are closed.