இருளில் மூழ்கிக் கிடக்கும் திருச்சி 1-வது குற்றவியல் நீதிமன்ற வளாகம்- மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்குமா?
திருச்சி குற்றவியல் நீதிமன்ற வளாகத்தில் 6 நீதிமன்றங்கள் இயங்கி வருகின்றன. இதில் முதல் மாடியில் குற்றவியல் நடுவர் நீதிமன்றம் எண்.1 உள்ளது. இந்த நீதிமன்றத்திற்கு பெரும்பாலும் மேற்கு புறவாசல் வழியாகவே போலீசார், வழக்கறிஞர்கள், நீதிமன்ற பணியாளர்கள் சென்று வருவார்கள். 30க்கும் மேற்பட்ட படிக்கட்டுகள் உள்ள இந்த பாதையில் கடந்த நான்கு நாட்களுக்கு மேலாக மின்விளக்குகள் எரியாமல் இருக்கின்றன. இதனால், இந்தப் பகுதி இருள் சூழ்ந்து காணப்படுகிறது. நேற்று பிப்.5ம் தேதி இரவு 7 மணி அளவில் நீதிமன்ற அலுவல் பணிகளை முடித்துவிட்டு போலீசார் தரைதளத்திற்கு கீழே இறங்கினர். அப்பொழுது அங்கு மின்விளக்குகள் இல்லாத காரணத்தினால் படிக்கட்டுகளில் இருந்து உருண்டு விழுந்து ஒரு போலீஸ்காரர் காயம் அடைந்தார். அலறல் சத்தம் கேட்டு தரை தளத்தில் இருந்த நீதிமன்ற பணியாளர்கள் மற்றும் போலீசார் அவரை மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அவருக்கு கை,கால்களில் உள்ளிட்ட பல்வேறு இடங்களில் காயம் ஏற்பட்டது. கடந்த நான்கு நாட்களாக மின்விளக்குகள் எரியாத காரணத்தினாலேயே இந்த சம்பவம் நேரிட்டதாக நீதிமன்ற பணியாளர்கள் கூறினர். ஏற்கனவே குற்றவியல் நீதிமன்றங்களில் கழிவறை வசதி கிடையாது. தற்போது மின்விளக்குகளும் எரியாத காரணத்தினால் இந்த விபத்து நடந்தது குறிப்பிடத்தக்கது. இதுதொடர்பாக மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
Comments are closed.