தேவேந்திர குல மக்கள் இயக்க தலைவர் குமுளி ராஜ்குமார் உட்பட 2 பேர் கைது: துப்பாக்கிகள், நாட்டு வெடிகுண்டுகள் பறிமுதல்…! ( வீடியோ இணைப்பு )
திருச்சி மாவட்டம், பெட்டவாய்த்தலை பகுதியில் போலீசார் கடந்த 15-ம் தேதி வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது அவ்வழியாக வந்த ஒரு காரை போலீசார் நிறுத்த முற்பட்ட போது காரில் இருந்தவர்கள் காரை நிறுத்தாமல் வேகமாக சென்றனர்.
அப்போது அந்த கார் அங்கு வைக்கப்பட்டிருந்த பேரிகார்ட் மீது மோதி
நின்றது. போலீசார் அந்த காரின் அருகில்
சென்றபோது வீச்சறிவாளுடன் இறங்கிய ஒரு நபர் தன்னுடைய பெயர் குமுளி ராஜ்குமார் என்றும் தான் பெரிய ரவுடி என்றும் கூறி போலீசாருக்கு கொலை மிரட்டல் விடுத்து அங்கிருந்து தப்பி சென்றுள்ளார்.
அவரை போலீசார் வலைவீசி தேடி வந்த நிலையில்
அவர் பரமக்குடி பகுதியில் இருப்பதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அதன் அடிப்படையில் திருச்சி மாவட்ட தனிப்படை போலீசார் பரமக்குடி சென்று அங்கிருந்த குமுளி ராஜ்குமார் (45) மற்றும் அவருடன் காரில் பயணித்த பாலு என்கிற பாலசுப்ரமணியன்
(45) ஆகியோரை கைது செய்தனர். அவர்கள் பயன்படுத்திய காரை சோதனை செய்தபோது அதில் இரண்டு நாட்டு துப்பாக்கிகள், இரண்டு வீச்சறிவாள்,
25 நாட்டு வெடிகள் ஆகியவை இருந்தது. அதனை போலீசார் பறிமுதல் செய்தனர்.
அவர்களிடம் நடத்திய விசாரணையில் குமுளி ராஜ்குமார் திருநெல்வேலி மாவட்டத்தை சேர்ந்தவர் என்பதும்,
அவர் மீது பல்வேறு குற்ற வழக்குகள் உள்ளதும், சரித்திர பதிவேடு குற்றவாளியான அவர் தேவேந்திர குல மக்கள் இயக்கம் என்கிற அமைப்பை உருவாக்கி அதன் தலைவராக செயல்பட்டு வருவதும் தெரிய வந்தது.
மேலும் ,தேடப்படும் குற்றவாளியாக இருந்து வந்த குமுளி ராஜ்குமார் கடந்த 2021ம் ஆண்டு முதல் கைது நடவடிக்கைகளில் இருந்து தப்பித்து வந்துள்ளதும் போலீசார் விசாரணையில் தெரியவந்தது.
அவர் மீது ஆயுதங்கள் வைத்திருத்தல் உள்ளிட்ட வழக்குகளை பதிவு செய்த போலீசார் அவரை கைது செய்தனர். மேலும் அவருடன் இருந்த கரூர் மாவட்டத்தை சேர்ந்த பாலு என்கிற பாலசுப்பிரமணியத்தையும் கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.
0
Comments are closed.