திருச்சி, துவாக்குடி கல்லூரி அருகே செயல்படும் டாஸ்மாக் கடையால் தொடர்ந்து பிரச்சனை: மது போதையில் மாணவிகளிடம் ரகளை செய்த 2 பேர் கைது…! (வீடியோ இணைப்பு)
திருச்சி, துவாக்குடி அருகே அரசு கலை அறிவியல் கல்லூரி செயல்பட்டு வருகிறது. இந்த கல்லூரியில் ஆயிரக்கணக்கான மாணவ, மாணவிகள் பயின்று வருகிறார்கள். இந்த கல்லூரி அருகே டாஸ்மாக் மதுபான கடை செயல்பட்டு வருகிறது. மது பிரியர்கள் மது பாட்டில்களை வாங்கிக் கொண்டு கல்லூரி வளாகத்திற்குள் அமர்ந்து மது அருந்திவிட்டு பாட்டில்களை அங்கேயே போட்டு விட்டு சென்று விடுகின்றனர். சில சமயங்களில் மாணவ- மாணவிகளிடம் மது பிரியர்கள் சண்டை, சச்சரவுகளில் ஈடுபடுகின்றனர். ஆகவே, கல்லூரி அருகே செயல்படும் டாஸ்மாக் கடையை வேறு இடத்திற்கு மாற்ற கோரி மாணவ- மாணவிகளும், மாணவர் அமைப்பினரும் பல்வேறு கட்டங்களாக போராட்டம் நடத்தியும் இந்த டாஸ்மாக் கடை தொடர்ந்து செயல்பட்டு வருகிறது. இந்தநிலையில் இன்று(22-10-2024) கல்லூரிக்கு மாணவ, மாணவிகள் வழக்கம் போல வந்த நிலையில், மது பிரியர்கள் 3 பேர் கல்லூரி வளாகத்திற்குள் அமர்ந்து மது அருந்தி கொண்டு இருந்தனர். இதனைப்பார்த்த மாணவ- மாணவிகள் அவர்களை அங்கிருந்து செல்லுமாறு கேட்டுக் கொண்டனர். அப்போது மது பிரியர்கள் அங்கிருந்து செல்ல மறுத்ததோடு மாணவர்களை தகாத வார்த்தைகளால் திட்டி கொலை மிரட்டல் விடுத்துள்ளனர். இதுகுறித்து மாணவர்கள் கொடுத்த தகவலின் அடிப்படையில் கல்லூரிக்கு வந்த போலீசார், கல்லூரி வளாகத்திற்குள் மது அருந்திக் கொண்டிருந்த ரஞ்சித் மற்றும் ராஜன் ஆகிய இருவரை கைது செய்தனர். மேலும் கார்த்தி என்கிற இளைஞர் தப்பி ஓடிய நிலையில் அவரை போலீசார் தேடி வருகின்றனர். கல்லூரி அருகே செயல்படும் டாஸ்மாக் கடையை வேறு இடத்திற்கு மாற்றினால் மட்டுமே இதற்கு நிரந்தர தீர்வு காண முடியும் என்பது அப்பகுதி மக்களின் கருத்தாக உள்ளது.
Comments are closed.