ஸ்ரீரங்கம் பரதநாட்டியாலயா 50-வது ஆண்டு விழா கொண்டாட்டம்…
- தொழிலதிபர்கள், முன்னாள் மாணவிகள் நேரில் வாழ்த்து...!
திருச்சி, “ஸ்ரீரங்கம் பரதநாட்டியாலயா” நடன பள்ளியை நடத்தி வருபவர் ரேவதி முத்துசுவாமி. இவரது கணவர் முத்துசுவாமி. இவர் திருச்சி தேசிய கல்லூரி முன்னாள் முதல்வர் ஆவார். கடந்த 1973ம் ஆண்டு ரேவதி முத்து சுவாமி “ஸ்ரீரங்கம் பரதநாட்டியாலயா” நடன பள்ளியை துவக்கினார். இவர், உள்நாடு மற்றும் வெளிநாடுகளில் பரதநாட்டிய நிகழ்ச்சியை நடத்தியுள்ளார். இவரிடம் பரதநாட்டியம் பயின்ற மாணவிகள் பலர் இந்தியா மட்டுமின்றி சர்வதேச அளவில் பல்வேறு பகுதிகளில் வசித்து வருவதோடு ஆங்காங்கே கலைப் பள்ளிகளையும் நடத்தி பரத கலையை பயிற்றுவித்து வருகின்றனர்.

ஸ்ரீரங்கம் பரதநாட்டியாலயா துவங்கி 50 ஆண்டுகள் நிறைவு பெறுவதை முன்னிட்டு பொன்விழா கொண்டாட்டங்கள் திருச்சி தேவர் ஹாலில் நடந்தது. விழாவில், இப்பள்ளியில் நடனம் பயின்ற 6 முதல் 55 வயது வரையிலான பெண்கள் கலந்து கொண்டு தங்களது குரு ரேவதி முத்து சுவாமி முன்னிலையில் நடன நிகழ்ச்சிகளை நடத்தியதோடு 250 மாணவிகள் மாபெரும் “குரு வந்தனம்” நிகழ்ச்சியை நடத்தினர். இந்நிகழ்ச்சி பார்வையாளர்களை பிரமிக்க வைத்தது.
விழாவில், பாரதிதாசன் பல்கலைக்கழக துணைவேந்தர் டாக்டர் எம்.செல்வம், திருச்சி மாவட்ட முன்னாள் மாவட்ட ஆட்சியர் உஜாகர்சிங், திருச்சி ரோட்டரி மிட் டவுன் தலைவர் நாகப்பா கார்ப்பரேஷன் அதிபரும் , திருச்சி தமிழிசை சங்கத்தின் தலைவருமான லெ.நா.லட்சுமணன், தமிழ்நாடு அரசு கலை பண்பாட்டுத்துறை இணை இயக்குனர் குணசேகரன், தமிழ்நாடு அரசு சுற்றுலா துறையின் இணை இயக்குனராக பணியாற்றிய இளங்கோவன், ராக்போர்ட் டைம்ஸ் முதன்மை செய்தி ஆசிரியர் எஸ்.ஆர். லெஷ்மி நாராயணன், ரேவதி முத்து சுவாமியின் குரு சந்திரசேகரன், திருச்சி தேசிய கல்லூரி முன்னாள் முதல்வர் சுந்தரராமன் , லைன்ஸ் கிளப் முன்னாள் தலைவர் ஆனந்த சங்கர் ஆகியோரும், தொழில் அதிபர்களும், உறவினர்களும், நண்பர்களும் திரளாக கலந்து கொண்டு ரேவதி முத்து சுவாமிக்கு வாழ்த்து தெரிவித்தனர். முடிவில், ரேவதி முத்து சுவாமி அனைவருக்கும் நன்றி தெரிவித்தார்.
ஸ்ரீரங்கம் பரதநாட்டியாலயா பள்ளி மாணவிகள் 1980ம் ஆண்டுகளில் “கோதை கண்ட கோபுரம்” என்னும் நாட்டிய நாடகம் நடத்தி அதன்மூலம் பெருமளவு நிதி திரட்டி ஸ்ரீரங்கம் ராஜகோபுரத்தை கட்டுவித்த அகோபிலமடம் 44வது பட்டம் ஜீயர் சுவாமிகளிடம் நன்கொடையாக வழங்கினர். அத்துடன் ராமாயணம், மகாபாரதம் போன்ற இதிகாசங்களில் இருந்து பல முக்கிய சம்பவங்களின் அடிப்படையில் பல்வேறு நாட்டிய நாடகங்களை வடிவமைத்து பல நாடுகளிலும் அரங்கேற்றி உள்ளனர். இதில் “கந்தன் காவியம்” நாட்டிய நாடகம் மட்டும் சுமார் ஆயிரம் முறைக்கு மேல் அரங்கேறி உள்ளது.
ரேவதி முத்துசாமியின் கலை சேவையை பாராட்டி தமிழக அரசு கலைமாமணி விருது வழங்கி கௌரவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.


Comments are closed.