Rock Fort Times
Online News

11 வது ஆண்டில் ராமஜெயம் கொலை வழக்கில் திருப்பம் அ.தி.மு.க., முன்னாள் எம்.எல்.ஏ., தம்பியிடம்விசாரணை!

தமிழக நகராட்சி நிர்வாகத்துறை அமைச்சர் நேருவின் சகோதரர் ராமஜெயம் கடந்த, 2012ம் ஆண்டு மார்ச், 29ம் தேதி அதிகாலை கடத்தி கொலை செய்யப்பட்டார். இந்த வழக்கை முதலில் திருச்சி மாநகர போலீசாரும், பின் சி.பி.சி.ஐ.டி., போலீசாரும், பின் ராமஜெயம் மனைவி லதா தொடர்ந்த வழக்கின் அடிப்படையில் சி.பி.ஐ.,யும் விசாரித்தனர். ஆனால் அவற்றில் எந்த முன்னேற்றமும் இல்லை. இந்நிலையில் தமிழகத்தில் ஆட்சி மாற்றம் ஏற்பட்டதால், கடந்த, 20 மாதங்களுக்கு முன், ராமஜயெம் கொலை வழக்கை விசாரிக்க, சிறப்பு புலனாய்வு குழுவை அமைத்து, முதல்வர் ஸ்டாலின் உத்தரவிட்டார். சி.பி.ஐ., வசம் இருந்த வழக்கை, நீதிமன்றம் மூலம் தமிழக அரசு திரும்பப் பெற்றது.
எஸ்.பி., ஜெயக்குமார் தலைமையிலான சிறப்பு புலனாய்வு குழுவினர் திருச்சியில் முகாமிட்டு, தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர். இதுவரை, 500க்கும் மேற்பட்ட ரவுடிகள் உள்ளிட்ட சந்தேக நபர்களிடம் விசாரணை நடத்தினர். 12 ரவுடிகளிடம், ஒரு மாதத்துக்கு முன் உண்மை கண்டறியும் சோதனையும் நடத்தப்பட்டது. ஆனால் வழக்கில் எந்த முன்னேற்றமும் ஏற்பட்டதாக தெரியவில்லை. இந்நிலையில், திருச்சி மாவட்டம், மண்ணச்சநல்லுார் தொகுதி அ.தி.மு.க., முன்னாள் எம்.எல்.ஏ., பரமேஸ்வரி தம்பி புல்லட் ராஜா, 41, அவரது மனைவி கிருஷ்ணவேணி, 36, மற்றும் சிலரிடம், மூன்று வாரங்களுக்கு முன் விசாரணை நடத்தியது தற்போது தெரிய வந்துள்ளது.
இதன் பின்னணி குறித்து சிறப்பு புலனாய்வு பிரிவு போலீசார் கூறியதாவது:
ராமஜெயம் கொலை செய்யப்பட்ட அதே பாணியில், புல்லட் ராஜா என்பவர், தனது நண்பர்களுடன் சேர்ந்து, இரு கொலைகளை செய்துள்ளார். குடிபோதையில் பணம் கேட்டு தாயிடம் தகராறு செய்த மகன் சதீஷ் என்பவரை, 15 லட்சம் ரூபாய் பணம் வாங்கிக் கொண்டு, மண்ணச்சநல்லுார் பகுதியில் வைத்து, கடந்த, 3 ஆண்டுகளுக்கு முன் புல்லட் ராஜா கொலை செய்துள்ளார். பின் ஆட்டோ டிரைவர் சின்ராஜ், 33, என்பவரை, தனது மனைவியிடம் தகாத உறவு வைத்திருந்ததற்காக, கடந்த ஆண்டு அக்., 22ம் தேதி சமயபுரம் கோவில் அருகே வைத்து கொலை செய்துள்ளார். இரண்டு சம்பவத்திலும், கொலையானவர்களின் கைகள் கம்பியால் கட்டப்பட்டிருந்துள்ளன. இது ராமஜெயம் கொலை செய்யப்பட்ட பாணியில் இருந்ததால், புல்லட் ராஜாவையும், அவரது மனைவி மற்றும் சிலரை அழைத்து விசாரித்தோம். இந்த கொலைகள் புல்லட் ராஜாவால் செய்யப்பட்டதா அல்லது கூலிப்படை வைத்து செய்யப்பட்டதா, இந்த யோசனை எப்படி வந்தது என்பது குறித்து விசாரித்துள்ளோம். அதேசமயம், ராஜாவின் சகோதரி பரமேஸ்வரி அ.தி.மு.க., எம்.எல்.ஏ.,வாக இருந்தவர் என்பதால், அரசியல்ரீதியாக எதும் பிரச்னை இருக்கிறதா என்பது குறித்தும் விசாரணை செய்துள்ளோம். தேவைப்பட்டால் மீண்டும் விசாரிப்போம். இதேபோல், கடந்த, 2013ம் ஆண்டு தனது மனைவியிடம் தகாத உறவு வைத்திருந்த ஜெயபால் என்பவரையும், புல்லட் ராஜா கொலை செய்ததாக தெரிகிறது. அது இன்னும் உறுதி செய்யபடவில்லை.
இவ்வாறு அவர்கள் கூறினர்.
ராமஜெயம் கொலை வழக்கு குறித்து, தமிழக போலீஸ் டி.ஜி.பி., சைலேந்திரபாபு சில வாரங்களுக்கு முன் திருச்சியில் அளித்த பேட்டியில், வழக்கில் நல்ல முன்னேற்றம் ஏற்பட்டுள்ளது என்று கூறினார். ஆனால் சிறப்பு புலனாய்வு செயல்பாடுகள் அடிப்படையில், வழக்கில் பெரிய அளவில் எந்த முன்னேற்றமும் காணமுடியவில்லை என்றே தெரிகிறது. வரும், 29ம் தேதியுடன், ராமஜெயம் கொலை செய்யப்பட்டு, 11 ஆண்டுகள் ஆகிறது என்பது குறிப்பிடத்தக்கது

Leave A Reply

Your email address will not be published.

Rockfort Times செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள வேண்டுமா? இல்லை ஆம்